• Mon. May 20th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Apr 4, 2024
நற்றிணைப்பாடல் 355:

புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்
செம் முக மந்தி ஆரும் நாட! முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்,
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்;
அம் சில் ஓதி என் தோழி தோட் துயில்
நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ
என் கண் ஓடி அளிமதி நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே! இலக்கியம்

பாடியவர்:ஆசிரியர் அறியப்படவில்லை                                                    திணை: குறிஞ்சி

பொருள்:

புதல்வனைப் பெற்ற நீலமலர் போன்ற கண்ணையுடைய மடந்தை தன் கொங்கையைக் கையாலே பிடித்துத் தன் புதல்வன் வாயில் வைப்ப அக் குழந்தை அதன்கணுள்ள பாலைப் பருகுவதுபோல; காந்தளின் பூக்கொத்தொடு பொருந்திய கொழுவிய மடலையுடைய வாழைப்பூவின்; அந்த மடலுட்பட்ட அருவி போலப் பெருகிவரும் இனிய நீரைச் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கு பற்றிப் பருகா நிற்கும் மலைநாடனே! நட்புடையாளர் கண்ணோட்டமுடையார்க்கு எதிரே சென்றிருந்து ‘இதனை நீயிர் உண்பீராக!’ என்று நஞ்சைக் கலந்து கொடுத்தாலும்; நட்பின் மிக்க அக் கண்ணோட்டமுடையார் அது நஞ்செனக் கண்டு வைத்தும் கண் மறுக்கமாட்டாமையின் அதனையுண்டு பின்னும் அவரோடு மேவுவார்; நீ அத்தகைய நட்புடையனா யிருந்தும் அழகிய சிலவாய கூந்தலையுடைய என் தோழியின் தோளிலே துயிலுவதை நின் உள்ளத்து இன்பமாகக் கொண்டாயல்லை; அங்ஙனம் கொள்ளாயேயாயினும்; என்பால் உள்ள கண்ணோட்டத்தினாலாவது இவளுடைய தோளிலே துயிலுவதனை இன்பமாகக் கொண்டு தலையளி செய்வாயாக! இவள்தான் நின்பால் அடைக்கலமாக உடையள் அல்லது வேறொரு களைகணும் உடையள் அல்லள்காண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *