• Mon. Apr 29th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Mar 17, 2024

நற்றிணைப்பாடல் 343:

முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்
தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,
உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை புன்கண் அந்திக் கிளைவயின் செறிய,
படையொடு வந்த பையுள் மாலை
இல்லைகொல் வாழி – தோழி! – நத்துறந்து
அரும் பொருட் கூட்டம் வேண்டிப்
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே?

பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் திணை: பாலை

பொருள் :

தோழீ! வாழ்வாயாக! முல்லைக் கொடி படர்ந்த மலைவழி ஆகிய சிறிய நெறியைச் சாராது; அழகிய குடிகள் அமைந்த சிறிய ஊரின்கண்ணே; மலரின் தாதுக்களே எருவாக உதிர்ந்துடைய தெருவின்கண்; செல்லுகின்ற ஆனிரையின் முதுகிலே தீண்டுகின்ற நெடிய வீழிடப்பட்ட கடவுள் உறையும் ஆலமரத்திலிருந்து; அங்குக் கடவுளுக்குப் படைத்துப் போகட்ட பலிச் சோற்றைத் தின்ற தொக்க விரல்களையுடைய காக்கைகள் எல்லாம்; துன்பத்தைத் தருகின்ற மாலையம் பொழுதிலே தம்தம் சுற்ற மிருக்குமிடத்தை அடையாநிற்ப; பிரிந்தாரை யொறுக்கும் படையுடனே வந்த நோயைச் செய்யும் இம் மாலையானது; நம்மைத் துறந்துபோய் ஈட்டுதற்கரிய பொருள் தேடுதலை விரும்பி; பிரிந்துறையும் நம் காதலர் சென்ற நாட்டின்கண்ணே செல்லுவதில்லையோ? சென்று வருத்தினால் அவர் இன்னே வந்திருப்பரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *