• Mon. Jan 20th, 2025

இலக்கியம்:

Byவிஷா

Mar 16, 2024

நற்றிணைப்பாடல் 342:

‘மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்கு
மதில் என மதித்து வெண் தேர் ஏறி,
என் வாய் நின் மொழி மாட்டேன், நின் வயின்
சேரி சேரா வருவோர்க்கு, என்றும்
அருளல் வேண்டும், அன்பு உடையோய்!’ என கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்:
யானே – எல்வளை! – யாத்த கானல்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த
சென்னிச் சேவடி சேர்த்தின்,
‘என் எனப் படுமோ?’ என்றலும் உண்டே

பாடியவர்: ஆசிரியர் அறியப்படவில்லை திணை : நெய்தல்

பொருள்:

அன்புடைய தோழீ! கானலின்கண் ஒருவர் என்பால் வந்து இரந்து கூறலும் அதனைப் பொறேனாகி ‘என்வாயினால் நீ கூறும் மொழியைச் சென்று தலைவியிடம் கூறுகின்றிலேன், நின் குறை நீயே சென்றுரை’ யென்றதனாலே மயங்கி நின்று, குதிரை எனக் கருதிப் பனைமடல் ஏறிவந்தும், இது காவலையுடைய மதில் என மதித்து வெளிய பேய்த்தேரைச் சென்று நோக்கியும்; நீ இருக்கின்ற சேரியைச் சார வருபவர்க்கு எக்காலத்தும் அருள் செய்ய வேண்டும் என்று; யான் கண்ணினால் இனியகுறிப்புத் தோன்றத் தலைசாய்த்துக் காட்டியும் ஒளிபொருந்திய வளையையுடைய தலைவி அவற்றை அறிந்துகொண்டனளல்லள்; ஆதலால் யானே வேலி சூழ்ந்த கடற்கரைச் சோலையில் வண்டுகள் உண்ணுகின்ற நறிய மலருதிர்ந்து நுண்ணியதாகக் கோலஞ் செய்த அவ்விடத்து; எனது தலை அவ்விறைமகளின் சிவந்த அடிகளிலே சேர்த்து வணங்கினால்; அத்தலைவர் செயல் இப்பொழுது எப்படியாயிருக்கின்றதோ? என்று என்னை வினாவலும் உண்டாகும்; அப்பொழுது நிகழ்ந்தவற்றைக் கூறுவேன்.