• Fri. May 3rd, 2024

இலக்கியம்:

Byவிஷா

Mar 18, 2024

நற்றிணைப்பாடல் 344:

அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்
காவல் கண்ணினம்ஆயின் – ஆயிழை!
நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப,
செல்வன் செல்லும்கொல் தானே – உயர் வரைப்
பெருங் கல் விடரகம் சிலம்ப, இரும் புலி
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து செந் தினை உணங்கல் தொகுக்கும்,
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே?

பாடியவர்: மதுரை அறுவை வாணி கன் இளவேட்டனார் திணை: குறிஞ்சி

பொருள்:

ஆராய்ந்து அணிந்த இழையினையுடையாய்! அழகிய மலைப்பக்கத்தில் வியப்புடையதாய் வளர்ந்த நீலமணி போன்ற தோட்டினையுடைய நிரம்பிய கருமையான தினைக்கதிர் எல்லாம்; பெரிய பிடியானையின் நெடிய கைபோல வளைந்துடைய பெரிய கொல்லையை; நாம் நாளை முதலாகக் காவல் செய்யக் கருதினேமாயின்; நம் காதலன் நம்முடைய நிலைமையை இடையிலே தெரிந்தறியானாய்; தன் மலையிலுள்ள சந்தனத்தைப் பூசிய அழகு விளங்கிய மார்பில் வண்டுகள் மொய்த்துப் பெரிதும் ஆரவாரிப்ப; உயர்ந்த மூங்கிலையுடைய பெரிய மலையகத்துள்ள பிளப்பிடமெல்லாம் எதிரொலி எடுக்கும்படியாக; கரிய புலி களிற்றியானையைத் தொலைத்து முழங்கும் பெரிய பூசலைக் கேட்டு இது முகிலின் இடிமுழக்கமாமென்று எண்ணி; சிவந்த தினை புலருமாறு போகடப் பட்டவற்றைக் கூட்டிக் குவிக்கின்ற; இனிய மலையிலுள்ள புது வருவாயினையுடைய தான்; சாரலின் நெடிய வழியிலே தமரோடு உறையும் தன் ஊர்க்குச் செல்லுவான் கொல்லோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *