• Mon. Apr 29th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Feb 25, 2024

நற்றிணைப்பாடல் 326 :

கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்,
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது,
துய்த் தலை மந்தி தும்மும் நாட!
நினக்கும் உரைத்தல் நாணுவல் – இவட்கே நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப்
பசலை ஊரும் அன்னோ; பல் நாள்
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண,
வண்டு எனும் உணராவாகி,
மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே

பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார் திணை : குறிஞ்சி

பொருள்:

கொழுத்த சுளையையுடைய பலாவின் பயன் மிக்க மலைப் பக்கத்தில் செழுமையாகிய காய் காய்த்துப் பருத்தலாலே தாங்கமாட்டாது வளைந்த கரிய கிளையிலே வந்து தங்கிய; கொக்கானது மீனைக் கொணர்ந்து குடைந்து தின்னுதலால் உண்டாகிய புலவு நாற்றம் பொறுக்கவியலாது; ஆங்குள்ள பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி தும்மா நிற்கும் மலை நாடனே! பலநாளும் அறியப்படுகின்ற அமர்ந்த அழகுடைய எமது தினைப்புனத்தை நீ அடைதலுண்டெனினும்; இன்ன காரணத்தாலே தோன்றினவென்று நம்மால் உணரப்படாதனவாகி; நீல மலர் போலப் பொருந்திவரும் இவளுடைய கண்ணில்; நுண்ணிய கொடிப் பீர்க்கின் மலர்ந்த பிற்றை நாள் உதிரும் பழம் பூவின் நிறம்போலப் பசலை உண்டாகாநிற்கும்; அதனை நினக்குச் சொல்லவும் யான் வெட்கமுடையவளாயிராநின்றேன்; இவட்கு இத்தகைய துன்பம் வாராதபடி காப்பாயாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *