• Sat. May 4th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Feb 5, 2024

நற்றிணைப்பாடல்: 317

நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த
பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப,
தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை,
பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும்
உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை அன்னை அறிகுவள்ஆயின், பனி கலந்து
என் ஆகுவகொல்தானே – எந்தை
ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி,
ஆயமொடு குற்ற குவளை
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே?

பாடியவர்: மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார். திணை : குறிஞ்சி

பொருள்:

நீண்ட கரிய மலையிலே பிடியானையொடு கலந்த பொலிவுற்ற முகத்திலே புள்ளியையுடைய களிற்றியானையின் தூக்கிய கைபோல; மேலிலையகத்தினின்றும் நீண்டு வளைந்த பசிய தினைக்கதிரை; பவளம்போலச் சிவந்த வாயையுடைய பசிய கிளிகள் கொய்துகொண்டுபோகாநிற்கும் உயர்ந்த மலைநாடனே! நீ விரும்பிய இத் தலைவியிடத்து வைத்திருக்கும் களவொழுக்கத்தாலாகியநட்பை எம்மன்னை அறிகுவாளாயின்; எந்தையினது உயர்ந்த மலைச் சாரலினுள்ள இனிய சுனையிலே நீராடி; தோழியரோடு சென்று பறித்த அச் சுனைக் குவளையின் கரிய இதழ்களையுடைய சிறந்த மலரையொத்த கண்கள்; நீர்கலந்து வடியப் பெற்று இனி எப்படியாகி முடியுமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *