• Sat. Apr 27th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Nov 6, 2023

நற்றிணைப் பாடல் 293:

மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி,
பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன்
இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து,
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப்
பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல்,

பெரு விதுப்புறுகமாதோ – எம் இற்
பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ,
கொண்டு உடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே.

பாடியவர் : கயமனார்
திணை : பாலை

பொருள் :

நீலமணி போலும் பூங்கொத்தினையுடைய நொச்சிமாலையைச் சூடிப் பலிகளிடுதற்கு அமைந்த கையையுடைய பரிய முதிய குயவன்; தன்னால் இடப்படும் பலியை உண்ணுதற்கு அணங்குகளையும் காக்கைகளையும் அழையாநிற்கும் அகன்ற இடத்தையுடைய மன்றத்தின்கண்ணே; திருவிழாச் செய்தலை மேற்கொண்ட பழைமையான வெற்றியையுடைய இம் மூதூரிடத்தில்; எம் புதல்வியுடன் விளையாடும் நெய்தன் மலர் போலும் கண்ணையுடைய தோழியரைக் காணும்போதெல்லாம்; யாம் பெரிய நடுக்கமுற்றுத் துன்பப்படுவதுபோல; எம் மனையகத்திருந்த பொலிவு பெற்ற கூந்தலையுடைய எம் புதல்வியை மருட்டிப் பலவாய பொய்ம்மொழிகளைக் கூறி; தன் சொற்படி ஒழுகச் செய்து தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்ற வன்கண்மையுடைய காளையாவானை ஈன்ற தாயும்; இத்தகைய கொடிய புதல்வனை ஈன்றதனாலே அவள் பெரிய நடுக்கமுற்றுத் துன்பம் அடைந்தொழிவாளாக!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *