• Mon. Dec 9th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Oct 9, 2023

நற்றிணைப் பாடல் 267:

‘நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி,
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல்
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் தன்னொடு புணர்த்த இன் அமர் கானல்,
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து’ என,
வாரேன்மன் யான், வந்தனென் தெய்ய;
சிறு நா ஒண் மணித் தௌ இசை கடுப்ப,
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல், ‘இவை மகன்’ என்னா அளவை,
வய மான் தோன்றல் வந்து நின்றனனே.

பாடியவர் : கபிலர்
திணை : நெய்தல்

பொருள் :

நொச்சியின் கரிய அரும்பு போன்ற கண்ணையுடைய மணலால் ஆகிய எக்கரின்கண் உள்ள பெரிய சுற்றத்தையுடைய ஞெண்டின் கூட்டம; விளங்கிய பற்களின் அழகிய இனிய நகையையுடைய மாதர்கள் வெயிலிலே காயுந் தினையைக் கைவிரலாலே துழாவி வருதல் போல மணம் வீசும் ஞாழலின் உதிர்ந்த மலரைக் காலால் வரித்துக் கோலஞ் செய்யுந் துறையையுடைய தலைவனொடு; கூட்டிய இனிய விருப்பத்தையுடைய கழிச் சோலையிலே அவளின்றித் தனியே நான் வருதல்; மிக வருத்தமுடையதாய் இராநின்றது எனக் கருதி அதனால் பெரும்பாலும் வாராதிருந்த யான்; முன்பு ஒருநாள் வந்துளேனாகி, சிறுநா ஒள் மணித் தௌ இசை கடுப்ப இனம் மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல் சிறிய நாவையுடைய ஒள்ளிய மணியின் தெளிந்த ஓசையைப் போலக் கூட்டமாகிய மீனைத் தின்னுகிறதற்கு வந்து கூடுகின்ற புள் ஒலிக்குங் குரலைக் கேட்டு; இவ்வொலி தலைமகனது தேர் மணியோசை போலுமென்றுட்கொண்டு “இவ்வோசை தலைமகன்” என்று சொல்லெடுக்கு முன்; வலிய குதிரையையுடைய தோன்றலாவான் ஆங்கு வந்து நின்றனன்; இப்பொழுது அங்ஙனமும் காணாதபடி காவல் செய்தாயிற்று;