

நற்றிணைப் பாடல் 255:
நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி,
அல்கு பெரு நலத்து, அமர்த்த கண்ணை;
காடே, நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த,
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே;
இந் நிலை தவிர்ந்தனம் செலவே: வைந் நுதிக் களவுடன் கமழ, பிடவுத் தளை அவிழ,
கார் பெயல் செய்த காமர் காலை,
மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த
கண் கவர் வரி நிழல் வதியும் தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே.
பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணை: பாலை
பொருள்:
நீதான் புலவராலே பாடுதற்கமைந்த குற்றமற்ற அழகிய சிறிய அடிகளுடனே பல்கிய பெரிய அழகு அமைந்த அமர்த்த கண்ணையுடையையாயிரா நின்றனை; காடுகளோ தீப்பற்றிய மரங்களையுடையனவாதலின் நிழலும் அழகும் நீங்கி ஒழிந்தன; அவ் வண்ணம் ஒழிதலும் தனிமை நிலைபெற்றிருத்தலினால் நன்மைகளெல்லாம் ஒருங்கே சிதைவுற்றன; இத் தன்மையாகிய நிலைமையினால் நின்னை உடன்கொண்டு சேறல் இயையாமையின் நின்னுடன் செல்லுதலைத் தவிர்ந்தனம்; அன்றிக் கூரிய நுனியையுடைய களாவின்மலர் ஒருங்கே மலர்ந்து மணங்கமழாநிற்பப் பிடாமலர் முறுக்குவாய் நெகிழ்ந்து மலர மேகந் தான் செய்ய வேண்டிய மழை பெய்தலைச் செய்யத் தொடங்கிய அழகிய கார்ப்பருவத்தில்; இளையபிணைமானைப் புணர்ந்த கரிய பிடரினை யுடைய கலைமான்; உள்ளே வயிர முற்றிய வேல மரத்தின் தாழ்ந்த கிளையினாற் பல்கிய காண்போர் கண்ணைக் கவர்ந்து கொள்ளும் வரி பொருந்திய நிழலிலே தங்கியிருக்கும்; குளிர்ச்சியுற்ற காட்டின் கண்ணே செல்லுவதனையும் தவிர்ந்தனம், ஆக இருவகைக் காலத்தும் நின்னைப் பிரியாதிருக்க நீ வருந்துவதென்னை? வருந்தாதே கொள்!

