

நற்றிணைப் பாடல் 257:
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ,
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்,
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு
இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்
அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப் பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம்
நல் மலை நாட! – நயந்தனை அருளாய்,
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக்
கடு மா வழங்குதல் அறிந்தும்,
நடு நாள் வருதி; நோகோ யானே
பாடியவர்: வண்ணக்கன் சோருமருங்குமரனார்
திணை: குறிஞ்சி
பொருள்:
அரும்புகள் முக மலர்ந்த கரிய காம்பையுடைய வேங்கை மரத்தின் பொன் போன்ற நறிய மலர் பாறைமேலுதிர்ந்து பரவாநிற்கும் நல்ல மலைநாடனே! எம்பால் விரும்பி அருள் செய்யாயாகி; ஓயாத முழக்கமொடு மழை மிகுத்து இடியிடித்து மேகம் ஓங்கிச் சென்று பெய்யத் தொடங்கிய குளிர்ச்சிமிக்க மலையிலே; மூங்கில் நெருங்கிப் பரந்த மிக உயர்ந்த நெடிய சிகரத்தின் கண்ணே; விளங்கிய வெளிய அருவியையுடைய அகன்ற மலைப்பக்கத்தில்; வழிப் போகுவார் யாருமில்லாத நீர் விளங்கிய சிறிய நெறியிலே; கொடிய சிங்கமுதலிய விலங்குகள் இயங்குவதனை அறிந்துவைத்தும்; இரவு நடுயாமத்தில் நீ வாராநின்றனை; இதற்கு யான் நோகா நின்றேன் அல்லேனோ?

