• Mon. May 6th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Aug 27, 2023

நற்றிணைப் பாடல் 238:

வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மா மழை! ‘அவர் நிலை அறியுமோ, ஈங்கு’ என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட
கனியா நெஞ்சத்தானும், இனிய அல்ல, நின் இடி நவில் குரலே.

பாடியவர் : கந்தரத்தனார்
திணை:

பொருள்:முல்லை

கோடை தெறுதலாலே பட்டுப்போன காட்டிலே சிறிய பூவணிந்த கூந்தலையுடைய ஆயர் மகளிர் கூடுகின்ற கூட்டம் போல; வண்டுகள் வாய்திறந்து தேனைப் பருகும்படி மலர்ந்த பிடவுகளையுடைய அந்திமாலையில்; யான் காமநோய் மிகக்கொள்ளுமாறு கார்ப்பருவத்தைச் செய்த மின்னல் முதலாகிய தொகுதியையுடைய கரியமேகமே! நீ “அவர் நிலைமையை இங்கு நான் கூற அறிந்து கொள்” என்று வருதல்; சான்றோர் செய்கையைஒத்ததாகமாட்டாது கண்டாய்! ஒரு சேர மயங்கி நின் இடித்து முழங்குந் தொழிலையுடைய குரல் வலிய இடியாய் முழங்குந் தன்மையினாலே; பரவிய பாம்புகள் படம் மழுங்கி யடங்குமாறு செய்வதல்லாமல்; மாட்சிமைப்பட்ட தலைவரது நெஞ்சம் கனியும்படி செய்ய வல்லனவல்லவாதலால் நின் இடித்து முழங்கும் அக் குரல் எனக்கு இனிமை செய்வன அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *