• Sun. May 5th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Aug 6, 2023

நற்றிணைப் பாடல் 224

அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,
‘பின்பனி அமையம் வரும்’ என, முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;
‘புணர்ந்தீர் புணர்மினோ’ என்ன, இணர்மிசைச்
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும் இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்
‘பிரியலம்’ என்று, தௌத்தோர் தேஎத்து,
இனி எவன் மொழிகோ, யானே – கயன் அறக்
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி
வில் மூசு கவலை விலங்கிய வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே?

பாடியவர்: பெருங்கடுங்கோ
திணை: பாலை

பொருள்:

நம்பால் அன்புடையவர் மிகப் பெரியர் அவர் அப்படியிருப்ப; அதன்மேலுங் காலமோ பின்பனிக் காலம் வருமென்று முன்பனியின் கொழுந்தை முற்படவிட்டு அறிவுறுத்தி அதற்கு அடையாளமாக; குராமரம் அரும்பு கட்டின; மாவின் பூங்கொத்துமீது சிவந்த கண்களையுடைய கரிய குயிலின் சேவலும் பேடையும் எதிரெதிரிருந்து; ‘ஓ தலைவனும் தலைவியுமாயமைந்து புணர்ந்துடையீர் பிரியாதீர் இன்னும் பலபடியும் புணருங்கோள்!’ என்று; தம் இனிய குரலாலெடுத்து இசைக்காநின்ற இன்பமுடைய வேனிற் பருவம் வந்திறுத்ததாதலின்; ‘இனி நம் வயிற் பிரியகில்லோம்.’ என்று என்னைத் தெரிவித்தனர், அங்ஙனம் தெரிவித்தவராய்ப் பின்பு; குளங்களில் நீர்வற்றத் தடையறச் செவ்வியழிந்து காய்ந்த பல பெரிய நெடிய நெறியையுடைய; மறத் தொழில் நெருங்கிய கவர்ந்த வழிகள் குறுக்கிட்ட கொடிய முனையையுடைய செல்லுதற்கரிய சுரத்தின் கண்ணே சென்றனர், அவ்வாறு சென்றவர் நிமித்தமாக; அவர்பால் இனி யான் யாது சொல்லமாட்டுவேன்?

:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *