

நற்றிணைப் பாடல் 216:
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கை போல் உதவி,
நம் உறு துயரம் களையார்ஆயினும்,
இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே;
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையராயினும்,
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே.
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்
திணை: நெய்தல்
பொருள்:
புலவி தணித்துக் கூடுகின்ற கலவியொடு பொருந்தி என்பால் எய்திலராயினும் பலகாலும் முன்பு அவர் மெய்யை நோக்கி மகிழ்ந்துளேனாதலின்; அங்ஙனமாகக் காணுந் தரத்தினரை நோக்கி யிருந்தாலும் உயிரோடு வாழ்வதினியதாகும், அவ்வண்ணம் காணப்பெறேனாதலின் யான் இனி உயிர்வைத்திருப்பதில் யாது பயன்? கண் உறு விழுமம் கை போல் உதவி நம் உறுதுயரம் களையார் ஆயினும் கண்ணில் விழுகின்ற நுண்ணிய துகளையும் கை விலக்குமாறு போல நம்மையுற்ற துன்பத்தை நீக்காராயினும்; அவரில்லாதவூர் இன்னாதாகும், இன்னாதவூரில் யான் இருந்தும் யாது பயன்? ஆதலின் இன்னே துறந்தகலினும் அகலுவன்; குருகுகள் ஆரவாரிக்கும் வயற் கரையிலே கடவுள் ஏறிய எரிபோன்ற பூவையுடைய வேங்கை மரத்திற்கட்டிய கட்டுப்பரண் அருகிலே; அயலான் ஒருவன் செய்ததனாலாய கவலை வருத்துதலாலே; ஒரு கொங்கையை அறுத்த திருமாவுண்ணியைக் கேட்டவர்கள் அத்தன்மையராயினும்; அவள்பால் அன்பு வைத்தவர் மாத்திரம் வருந்துவரேயன்றிப் பிறர் வருந்துபவரல்லர்; அவ்வாறே தலைவரைப் பிரிந்த தலைவி வருந்துவளாயினும் மிக்க வேட்கையையுடைய யான் வருந்துந்துணை அவள் வருந்துபவளல்லள்; அங்ஙனமே பிறரும் வருந்துபவரல்லர்.
