• Sat. May 11th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Jul 19, 2023

நற்றிணைப் பாடல் 210:

அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.

பாடியவர்: மிளைகிழான் நல்வேட்டனார்
திணை: மருதம்

பொருள்:

 தலைவனே! நீ வளம் மிக்க ஊரை உடையவன். நெல் அறுத்த வயலை மீண்டும் உழுது விதைப்பவர்கள் விதை கொண்டு சென்ற பாத்திரத்தில் பல வகையான மீனை நிரப்பிக்கொண்டு இல்லம் திரும்பும் அளவுக்கு வளம் மிக்க ஊரை உடையவன் நீ. வலிமையை வெளிப்படுத்தி வஞ்சினம் கூறுவதோ, சிறப்பு மிக்க ஊர்தியில் பகட்டாகச் செல்வதோ செல்வம் ஆகாது. இவையெல்லாம் செய்வினைப் பயனால் கிடைத்த நற்பேறுகள். சேர்ந்திருப்பவர் படும் துன்பத்துக்கு அஞ்சுவதுதான் சான்றோர் மதிக்கும் செல்வம். அதனை நீ ஈட்டிக்கொள். இவளைத் துன்பப்படும்படி விட்டுவிட்டுப் பரத்தையிடம் செல்லாதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *