

நற்றிணைப் பாடல் 209:
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்
சில வித்து அகல இட்டென, பல விளைந்து,
இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்,
மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல்
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே
படும்கால் பையுள் தீரும்; படாஅது
தவிரும் காலை ஆயின், என்
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே!
பாடியவர்: நொச்சி நியமங்கிழார்
திணை: குறிஞ்சி
பொருள்:
மலையில் இடம் உண்டாக்கி வளைத்துப் போட்ட கொல்லை நிலத்தை மழை ஈரம் பெற்று உழுத மலைக்குறவர் தினையை விதைத்துவிட்டுச் செல்ல,
அது பலவாக விளைந்துள்ளதைக் காக்கவேண்டும் என்று அவள் நினைத்துப் பார்க்கவில்லை. அவள் “சோ, சோ” என்று ஓட்டும் குரல் கிளிகளுக்குத் தெரியும்.
அவள் குரல் கேட்டால் என் காதல் துன்பம் தீரும். அவள் குரலோசை கேட்காவிட்டால், முன்பு கேட்ட அவள் குரலோசை என் உயிரை வாங்கும். இவ்வாறு தலைவன் பிதற்றுகிறான். தோழி இந்தப் பிதற்றலைக் கேட்டுத் தலைவியைத் தன்னோடு கூட்டுவிப்பாள் என்பது அவன் நம்பிக்கை.
