• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Sep 22, 2025

குறுந்தொகை

தாமரை புரையும் காமர் சேவடிப்
பவளத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற்
சேவலங் கொடியோன் காப்ப . . . . [5]
ஏமம் வைக எய்தின்றால் உலகே.

பொருளுரை:

அவனது திருவடிகள் தாமரை போன்றவை. யாவரும் விரும்பும் தன்மை உடையவை. அவனது மேனி பவளம் போன்றது. அதில் குன்றிமணி போல் சிவந்த ஆடை அணிந்துள்ளான். வலக்கையில் கிரவுஞ்சம் என்னும் குன்றின் நெஞ்சு பிளக்க எறிந்ததும், அழகுச்சுடர் வீசுவதுமான நீண்ட வேலை உடையவன். இடக்கையில் சேவல் அணிசெய்யும் கொடியை உடையவன். அவன் காப்பதால் இந்த உலகம் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பைப் பெறுகிறது.

சிறப்பு: 

இப்பாடலில் செம்மேனி எம்மானாக முருகப்பெருமான் குறிக்கப்படுகின்றார். சிவந்த தாமரை போன்ற திருவடிகள்; சிவந்த பவளம் போன்ற மேனி; சிவந்த குன்றிமணிபோன்ற ஆடை; சிவந்த ரத்தம் தோய்ந்த சுடர்நெடுவேல் அசுரனின் நெஞ்சைப்பிளந்ததால்!; சிவந்த நிறமுடைய சேவலை எழுதிய கொடி; இத்தகைய செம்மேனி எம்மான் என்கின்றது இப்பாடல். முருகன் சிவந்த நிறம்கொண்டவனல்லவா? புலவரின் கற்பனை அழகு போற்றத்தக்கது. சிவந்த திருவடிகள், சிவந்தமேனி, சிவப்பு ஆடை, சிவப்பான நெடுவேல், சிவந்த சேவல் இவற்றையுடைய செம்மேனி எம்மானாம் முருகன். அழகான காட்சிஓவியம்!