• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Jul 1, 2024

நற்றிணைப்பாடல் 386:

சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,
துறுகட் கண்ணிக் கானவர் உழுத
குலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் ‘அணங்குடை அருஞ் சூள் தருகுவென்’ என நீ,
‘நும்மோர் அன்னோர் துன்னார் இவை’ என,
தெரிந்து அது வியந்தனென் – தோழி! – பணிந்து நம்
கல் கெழு சிறுகுடிப் பொலிய,
வதுவை என்று அவர் வந்த ஞான்றே

பாடியவர்: ஆசிரியர் அறியப்படவில்லை திணை: குறிஞ்சி

பொருள்:

தோழீ! சிறிய கண்ணும் பெரிய சினமுமுடைய ஆண்பன்றிகள் நிரம்பிய, மாலையணிந்த கானவர் உழுது விளைத்த; வளைந்த தினைக் கதிரைத் தின்று பக்கத்திலுள்ள மலைப்பிளப்பினைத் தனக்குத் தங்குமிடமாக உடைய புலிக்கு அஞ்சாது; மூங்கில் வளர்ந்த மலைச்சாரலில் உறங்காநிற்கும் மலைநாடன; ஒரு பொழுது நின்பாற் போந்து ‘இன்னதொரு நாளில் வந்து நின்னை வரைந்து கொள்வேன் அதற்குச் சான்றாக முருகவேள் முதலாயினாரைச் சுட்டியுந் தொட்டும் யாருங் கருதலரிய சூள் செய்து தருவேன்’ என்றலும்; அதனைக் கேட்ட நீ அவரை நோக்கி, ‘நின்னோடொத்த ஒருதன்மையோர் இத்தகைய சூள் புகலார் பெருந்தகைமை யென்பது நின் மாட்டில்லையாகலின் நீ சூளுறத் துணிந்தனை’ என்று கூற; அஃது உண்மையெனக் கொண்டிருந்த யான் பின்பு ஒருபொழுது நமது மலையகத்து விளங்கிய சிறுகுடி பெருகிப் பொலிவடைய அவர் அந்தணர் சான்றோரை முன்னிட்டு அருங்கலந் தந்து ‘வதுவை யயர்தும்’ என்றும் வந்தநாளில்; அதனையறிந்து இவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒருவர் என வியந்தனென்காண்!