• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Jul 30, 2022

நற்றிணை பாடல் 2:
அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!

பாடியவர்: பெரும்பதுமனார்
திணை: பாலை
துறை: உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது.

பொருள்:
தலைவனும், தலைவியும் இரவில் காட்டு வழியில் செல்கின்றனர். பார்த்தவர்கள் பேசிக்கொள்கின்றனர். தலைவி மென்மையானவள். அவள் முன்னே செல்ல அவன் பின்னே செல்கிறான். அவன் இளமை ததும்பும் பருவம் கொண்டவன். அவன் உள்ளம் கொடியது. புயலும் மழையுமாக இருக்கும்போது இடிக்கும் இடியைக் காட்டிலும் கொடியது. ஏனென்றால், மாலையில் செல்கிறான். மால் நோக்கு (மங்கிய பார்வை) வரும் காலத்தில் செல்கிறான். குண்டும் குழியுமாக இருக்கும் குன்றத்து வழி அது. உலவை என்னும் பேய்க்காற்று வீசிகிறது. ஈந்து தழைத்திருக்கிறது. இண்டங்கொடி முள்ளுடன் படர்ந்திருக்கிறது. வழியில் செல்வோர் தலைமேல் புலிக்குட்டிகள் பாய்கின்றன. அவை இரை தின்ற குருதியோடு கூடிய வாயை உடையவை. இப்படிப்பட்ட வழியில் செல்லத் துணிந்திருக்கிறானே! இவன் உள்ளம் கொடிது.