• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நற்றிணைப் பாடல் 308:

Byadmin

Nov 29, 2023

செல விரைவுற்ற அரவம் போற்றி,
மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,
வேண்டாமையின் மென்மெல வந்து,
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி,
வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப்
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,
ஆகம் அடைதந்தோளே: அது கண்டு,
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம்
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம்
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.

பாடியவர் : இளங்கீரனார்

திணை : பாலை

பொருள் :
தலைவன் பொருளீட்டச் செல்லவிருக்கும் அரவம் (ஆரவாரம், பரபரப்பு) நிகழ்கிறது.
தலைவி அதனைப் போற்றிக்கொண்டு வருகிறாள். ஆனால் அவள் கண்களில் பனித்துளி போல் கண்ணீர்த் துளிகள் ததும்புகின்றன. அவள் ஆராய்ந்து பூட்டிய அணிகலன்களைக் கொண்டிருக்கிறாள். நான் அவளை அழைக்க (கரைய) அவள் நாணத்தோடு வருகிறாள். நான் பிரிந்து செல்லவேண்டாம் என்ற எண்ணம் அவளுக்கு. என்றாலும் அவள் என்னை எதுவும் கேட்கவில்லை. போகவேண்டாம் என்று தடுக்கவும் (தகைத்தலும்) இல்லை. காம வெறி மூட்டும் மணம் கமழ்கிறது. அது அவளது தயங்கும் (மெல்ல ஆடும்) கூந்தலிலிருந்து வருகிறது. அவளுக்கு ஏதோ நீண்ட நினைவு. என் நெஞ்சைத் தன் நெஞ்சால் அடைத்துக்கொண்டாள்
(தழுவிக்கொண்டாள்). அதனைக் கண்டதும், பொருளைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஈர மண்ணில் செய்து காயவைத்திருக்கும்
நீர்க்குடம் பெருமழை நீரை ஏற்பது போல் கரைந்து மகிழ்ச்சியில் திளைப்பதாயிற்று.
என்னவளைப் பிரியும் முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.