• Thu. May 9th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Nov 28, 2023

நற்றிணைப் பாடல் 307:

கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்;
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்;
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே – தோழி! – வார் மணற் சேர்ப்பன் இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை
மா அரை மறைகம் வம்மதி – பானாள்,
பூ விரி கானல், புணர் குறி வந்து, நம்
மெல் இணர் நறும் பொழில் காணா
அல்லல் அரும் படர் காண்கம் நாம், சிறிதே

பாடியவர் : அம்மூவனார்
திணை : நெய்தல்

பொருள் :

தோழீ! செல்லுதலில் விருப்பமுடைய குதிரை பூட்டிய நெடிய தேரிலே கட்டிய மணியும் ஒலியாநிற்கும்; பெயர்ந்துபட நடக்கின்ற வீரரும் ஆரவாரிப்பர்; ஆதலின் நெடிய மணற்குன்றினையுடைய சேர்ப்பன்; மகளிர் சென்று கடனீராடுகின்ற அகன்ற இடத்திலே மிக்க அழகுடன் பொலிந்து விளங்குகின்ற துத்தி படர்ந்த நினது அல்குலின் நலனைப் பாராட்டுமாறு இப்பொழுதே வருகிற்பன்காண்! அவ்வண்ணம் வரினும் இதுகாறும் வாராது நம்மை நடுங்க வைத்துளன் ஆதலின், அவனும் இந் நடுயாமத்து மலர் விரிந்த சோலையில் நாம் புணர்கின்ற குறியிடத்து வந்து மெல்லிய பூங் கொத்தினையுடைய நறிய சோலையின்கண்ணே நம்மை எதிர் காணாதவனாகி; படுகின்ற நீங்குதற்கரிய அல்லலாகிய துன்பத்தையும் நாம் சிறிது பார்ப்போம்; அதனால் நமது மனையருகில் வளைந்த குடமுழாப் போன்ற அடியையுடைய புன்னையின் கரிய அடிமரத்தின் பின்னே சென்று மறைந்து கொள்வோம்; நீ வருவாயாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *