• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குறுந்தொகைப் பாடல் 54

Byவிஷா

Apr 14, 2025

யானே யீண்டை யேனே யென்னலனே
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலி னிவக்கும்
கானக நாடனொ டாண்டொழிந் தன்றே.
பாடியவர்: மீனெறிதூண்டிலார்.
பாடலின் பின்னணி:
தலைவனோடு கூடிக் களவொழுக்கத்தில் இருந்த பொழுது, ஒருநாள் தலைவி தலைவனோடு கூடி மகிழ்ச்சியாக இருந்தாள். அதற்குப் பிறகு, தலைவனைச் சிலகாலமாகக் காணவில்லை. தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளையும் செய்யவில்லை. அவனைக் காணததால் தன்னுடைய மகிழ்ச்சியை இழந்துவிட்டதாகத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
தோழி, நான் மட்டும்தான் இங்கே இருக்கிறேன். முன்பு என்னோடு கூடியிருந்த என்னுடைய மகிழ்ச்சி இப்பொழுது இங்கு இல்லை. அஃது, மீன் பிடிப்பவர்கள், மீன் தூண்டிலில் சிக்கியதை உணர்ந்து தூண்டிலை விரைவாக மேலே தூக்குவதைப்போல் தினைப் புனங் காப்பவர்கள் விடும் கவண்கல்லின் ஒலிக்கு அஞ்சி விரைவாகக் காட்டு யானை கைவிட்ட பசுமையான மூங்கில் உள்ள காட்டுக்குரிய தலைவனோடு சென்றொழிந்தது.