

ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி
காமம் கைம்மிக கையறு துயரம்
காணவும் நல்காய் ஆயின் பாணர்
பரிசில் பெற்ற விரி உளை நல் மான்
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி
இரவலர் மெலியாது ஏறும் பொறையன்
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின்
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து
பறவை இழைத்த பல் கண் இறாஅல்
தேனுடை நெடு வரை தெய்வம் எழுதிய
வினை மாண் பாவை அன்னோள்
கொலை சூழ்ந்தனளால் நோகோ யானே
திணை: குறிஞ்சி
பொருள்:
தலைவி மீது தீராத காதலோடு உடலும் உள்ளமும் அழிந்து கலங்குகிறேன். என்னுடைய அன்பு எல்லை கடந்து நிற்கும் துயரத்தில் உதவுவார் இன்றிக் கிடக்கிறேன். இதனைப் பார்த்துக்கொண்டு அவளை எனக்கு உதவாமல் இருக்கிறாய். அவள் கொல்லிப்பாவை போன்று என்னைக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறாள். என்ன செய்வேன் என்று சொல்லிக்கொண்டு தலைவன் கலங்குகிறான்.
தன் பாங்கன் உதவ வேண்டும் என்றோ, தலைவியின் தோழி உதவ வேண்டும் என்றோ தலைவன் மன்றாடுவதாக இதனை வைத்துக்கொள்ளலாம்.
