

நற்றிணைப் பாடல் 186:
கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி
இரும் பிணர்த் தடக் கை நீட்டி நீர் நொண்டு
பெருங் கை யானை பிடி எதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து
பாண் யாழ் கடைய வாங்கி, பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
காமர் பொருட் பிணி போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே
திணை : பாலை
பொருள்:
கல்லில் ஊறிய நீரை நிறம்ப விடாமல், கல்-குளத்திலுள்ள நீர் முழுவதையும் ஆண்யானை தன் கையை நீட்டி மொண்டுகொண்டு பெண்யானைக்கு எதிரே ஊட்டுவதற்கு ஓடும். காடே வெம்பிப்போய் வறட்சி மிக்கதாய்க் கிடக்கும் அந்தக் காட்டு வழியில் அவர் செல்கிறார். அது வேனில் காலம். ஆண்-பச்சோந்தி யாழ் போல் தன் முதுகை வளைத்துக்கொண்டு உயர்ந்த யா-மரத்தில் ஏறும். அந்த வழியில் நான் விரும்பும் காதலர் பொருள் தேடிவரச் சென்றிருக்கிறார். பிறருக்காக முயலும் அருள் நெஞ்சத்தோடு சென்றிருக்கிறார். தலைவி தன் தலைவனைப் பற்றித் தோழியிடம் கூறிப் பெருமிதம் கொள்கிறாள்.
