எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘கள்ளன்’. இப்படத்தில் கரு.பழனியப்பன், நிகிதா, மாயா, நமோ நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பீக்காக் பிக்சர்ஸ் சார்பில் விநியோகஸ்தர் குமரன் இந்தப் படத்தை வெளியிடுகிறார். வரும் 18-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா 12.03.2022 மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
இந்த விழாவில் இயக்குநர்கள் சீனு ராமசாமி, ராஜூ முருகன், இசையமைப்பாளர் கே, நடிகை மாயா, நமோ நாராயணன், பத்திரிகையாளர் ஜெயராணி, எழுத்தாளர் தமயந்தி, நடிகர் ஆரி அர்ஜுனன் உட்பட பல திரைப் பிரபலங்கள் பங்கேற்றனர்
இந்த விழாவில், இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, “ஒரு நாள் டெல்லியில் ஒரு பயணத்தில் தயாரிப்பாளர் மதியழகனை சந்தித்தேன். அப்போது அவர் “சந்திரா ஒரு அருமையான கதையைச் சொன்னார். அதை தயாரிக்கலாம் என்று நினைத்துள்ளேன்..” என்றார். உடனே சந்திரா எழுதிய அந்தச் சிறுகதையின் தரத்தை சொல்லி “முதலில் அந்தப் படத்தை கமிட் செய்யுங்கள்…” என்றேன்.
இந்தப் படத்தின் விஷுவல்கள் ரத்தமும், சதையுமாக புதிதாக இருக்கிறது. இது போன்ற பிராந்திய வாழ்வை முன் வைக்கிற படைப்புகளுக்கு ஆயுள் காலத்தை குறிக்க முடியாது. ஒரு பெண் எழுத்தாளர், இயக்குநராவதை நாம் ஆதரிக்க வேண்டும். இந்தப் படத்தின் கதை நாயகனாக நடித்திருக்கும் கரு.பழனியப்பன் இங்கு வந்திருக்க வேண்டும். நன்றாகத்தான் நடித்துள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து ஒரு அமைச்சரை அழைத்திருந்தால் கரு.பழனியப்பன் இங்கே வந்திருப்பார். ஒரு நியாயமான மனிதர், கோபத்தால் வரவில்லை என்பது சரியில்லை. அவர்தான் முன்னின்று இந்தப் படத்தை தூக்கியிருக்க வேண்டும்.
பெரிய படங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் சிறிய படங்களுக்கு கிடைப்பதில்லை, ‘பீஸ்ட்’ படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனெனில், அது பெரிய ஹீரோ நடித்த படம். ஆனால் இந்தக் ‘கள்ளன்’ வெற்றி பெறுவதில்தான் ஒரு நாகரீகம் இருப்பதாக நான் கருதுகிறேன். ‘கள்ளன்’ வெளியாகும் நாள்தான் பொன்னான நாள். ‘கள்ளன்’ படம் சிறப்பான வெற்றியை பெற வேண்டும்…” என்றார்.



