

காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிரிடும் விளை பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – நாகர்கோவிலில் நடந்த இந்திய கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் விஜய் வசந்த் பேச்சு.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் இந்திய கூட்டணி வேட்பாளராக விஜய்வசந்த் போட்டியிடுகிறார் அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்த பின்னர் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் நடந்த இந்திய கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் மகேஷ், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முன்னாள் MP ராமசுப்பு, கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, மனித ஜனநாயக கட்சி தலைவர் தமின் அன்சாரி மற்றும் மதிமுக வெற்றி வேந்தன், விசிக காலித், தமுமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் விஜய்வசந்த் கலந்து கொண்டு பேசும்போது மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவது உறுதி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சம்பளம் 400 ரூபாயாக உயர்த்தப்படும் என தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதே போன்று விவசாயிகள் பயிரிடும் விளை பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க காங்கிரஸ் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். தனது தந்தை வசந்தகுமார் போட்டியிட்டபோது அவரை வெற்றி பெறச் செய்தீர்கள். அவரது மறைவுக்கு பின்னர் குமரி பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்தீர்கள். இப்போது இரண்டாவது முறையாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் நிச்சயமாக கன்னியாகுமரி மாவட்ட வாக்காளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று கூறினார்.


