• Fri. Apr 19th, 2024

இனி கணவரின் ஆதார் கட்டாயமில்லை.. அரசு அறிவிப்பு

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பேறுகால உதவியாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. PMMVY திட்டத்தின் கீழ் மகப்பேறு பலனைப் பெற சில நிபந்தனைகள் உள்ளன.. அதாவது, ஒரு பயனாளி தனது கணவரின் ஆதார் விவரங்களை தரவுத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு, பயனாளி, மகப்பேறு பலன்களைப் பெறுவதற்கு ஒரு பெண் தனது, கணவரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலைச் சமர்ப்பிக்க வேண்டும்.. எனினும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் தாய் அல்லது கர்ப்பிணிப் பெண்களுக்கான பிற திட்டங்களின் கீழ் இந்த நிபந்தனை இல்லை..

இதனிடையே நிதி ஆயோக்கின் வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு மதிப்பீட்டு அலுவலகம், PMMVY உட்பட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மத்திய நிதியுதவி திட்டங்களை மதிப்பீடு செய்துள்ளது மற்றும் அதன் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கணவனை இழந்த பெண் அல்லது கைவிடப்படப்பட்ட தாயைச் சேர்ப்பதற்கு வசதியாக, மிஷன் சக்தியின் கீழ் PMMVY திட்டத்தின் விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன..
அதன்படி, தற்போது இந்த திட்டத்தின் பயனை பெற கணவரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் மற்றும் ஆதார் கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்தத் தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி நேற்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

PMMVY திட்டம் ஒடிசா மற்றும் தெலுங்கானாவைத் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. புலம்பெயர்ந்தோர், திட்டத்தை செயல்படுத்தும் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்திலிருந்தும் திட்டத்தின் பலன்களைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *