

மனைவியை பலாத்காரம் செய்தது கணவராகவே இருந்தாலும் அதுவும் பலாத்காரம்தான் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.
மனைவி அளித்த பலாத்கார புகார் மீது கணவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஆண் என்பவர் ஆண்தான். சட்டம் என்பதும் சட்டம்தான். பலாத்காரம் என்றால் அது பலாத்காரம்தான். ஒரு ஆண் பலாத்காரம் செய்து, அது கணவராக இருந்தாலும், பலாத்காரத்துக்குள்ளான பெண் மனைவியாகவே இருந்தாலும் பலாத்காரம் தான் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி எம். நாகபிரசன்னா தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
திருமணமானது முதல் தன்னை பாலியல் அடிமையாக நடத்துவதாகக் கூறி மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா இந்தத் தீர்ப்பை அளித்து, மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்.
