‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. வேடசந்தூர், கரூர் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். முதலில் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் – கரூர் பிரதான சாலையில் குழுமியிருந்த எராளமான மக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
“திண்டுக்கல் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. வேடசந்தூர் தொகுதியில் தெரியும் எழுச்சியின் மூலமாக இங்கு அதிமுக வெற்றி உறுதியாகிவிட்டது. திமுகவின் இந்த நான்காண்டு காலத்தில் ஏதாவது பெரிய திட்டம் இந்த தொகுதிக்கு கொண்டுவந்தார்களா?
அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கையை ஏற்று, 350 கோடியில் மதிப்பில் அற்புதமான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து, ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கச் செய்தோம். அதிமுக ஆட்சியில் இருந்தபோது இதேபோல தமிழகத்தின் பல மாவட்டங்களில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 17 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து வரலாற்று சாதனை படைத்தோம்.

இந்த நாலாண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டுவருவதற்கு திராணியற்றது இந்த விடியா திமுக அரசு. பொம்மை முதல்வர் ஆள்வதால் மகக்ளுக்குத் தேவையான திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அம்மா இருக்கும்போதும் மறைந்தபிறகும் மக்கள் எண்ணோட்டத்துக்கு தகுந்தவாறு அதிமுக அரசு செயல்பட்டது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துவிட்டது. போதைப் பொருள் விற்பனை அமோகம். இந்த ஆட்சியால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துங்கள் என்று பலமுறை நாங்கள் சொல்லியும் கேட்கவில்லை.
‘மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள்’ என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். உதயநிதி போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்கிறார். இதெல்லாம் எப்போது..? எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின்னர் சொல்லி என்ன பயன்? எதிர்க்கட்சி சொல்லும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்கலாம். நாங்கள் சொன்னதை அலட்சியப்படுத்தியதால் இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி சீரழிகிறார்கள்.
போதை ஆசாமிகளால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. கொலை, கொள்ளை, பாலியல் சீண்டலில் போதை ஆசாமிகள் ஈடுபடுவதால் தமிழகத்தின் அமைதி தலைகீழாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட அவல ஆட்சி தொடர வேண்டுமா?
திமுக நிர்வாகிகளின் குடும்பத்தினர், போதைப் பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருப்பதால்தான் போதைப் பொருட்களை தடுக்க முடியவில்லை. தமிழகத்தில் போதைப் பொருள் எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதை சொல்ல வேண்டியது எங்களது கடமை.
பத்திரிகையில் வந்த செய்தியை சொல்கிறேன். திண்டுக்கல் துணை மேயர் மகனுக்கு பெங்களூரு போதைப் பொருள் நுண்ணறிவுப் போலீஸார் செவ்வாய்க்கிழமை அழைப்பாணை வழங்கியிருக்கிறார்கள். திண்டுக்கல் நகராட்சி துணை மேயர் ராஜப்பா, திமுக மாநகரச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். இவரது மகன் கார்டினல் இம்மானுவேல் கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதுடன் திண்டுக்கல் மாவட்ட பொறியாளர் அணியில் துணை அமைப்பாளராக உள்ளார். இவர் திண்டுக்கல் கிழக்கு, ஆரோக்கியமாதா தெருவில் வசித்துவருகிறார். இவர் மீது போதைப் பொருள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நான் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் செய்தி வெளியிடுவதாகச் சொல்வார்கள் என்பதாலே பத்திரிகை செய்தியை எடுத்துக் காட்டுகிறேன். இதன் மூலம் போதைப் பொருள் விற்பனைக்கு திமுக நிர்வாகிகள் துணை நிற்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. இப்படிப்பட்ட அவல ஆட்சி தொடர வேண்டுமா?
தமிழகத்தின் கல்வி வளர்ச்சியைப் பாராட்டுவதற்காக தெலங்கானா முதல்வர் சிறப்பு அழைப்பாளராக வந்துள்ளார், அப்படி சிறப்பாக வளர்ந்துள்ளதா..? ஏனென்றால் திமுக ஆட்சியில் அரசு பள்ளியில் சேரும் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிட்டது, அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. யாரும் திமுக ஆட்சியில் நியமிக்கப்படவில்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1.5 லட்சம் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால்1.5 லட்சம் ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர், அவர்களுக்கு அரசு என்ன செய்யப்போகிறது என்று சொல்லவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகம் என்று தவறான செய்தியை வெளீயிட்டு போட்டோஷூட் நடத்தி விளம்பர் மாடல் அரசு மக்களை ஏமாற்றுகிறது. அரசு ஆரம்பப் பள்ளியில் 5ம் வகுப்பு மாணவனால் 3ம் வகுப்பு பாடப் புத்தகத்தை படிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் முதல்வர் புதிய நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்.
இன்று நெல்லையில் ஒரு வகுப்பறையில் மாணவர்கள் அரிவாளால் வெட்டிக்கொண்டனர். பள்ளியில் படிப்பதற்கு புத்தகம் எடுத்துப் போவார்கள். ஆனால் இப்போது அரிவாளைத் தூக்கி சென்றுள்ளனர். இது வெட்கக்கேடான ஆட்சி, இதுக்கு தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக தோற்றத்தைக் காட்டுகிறார். இவை அத்தனையும் பொய்.
தொழில் துறை அமைச்சர், ஒரு வெள்ளை காகிதத்தைக் காட்டி இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார். எவ்வளவு ஏத்தம் இருந்தால் இப்படிப் பேசுவார்..? நாட்டில் பல லட்சம் பேர் வேலையில்லாமல் சிரமப்படுகிறார்கள். இந்த 52 மாத ஆட்சியில் 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், 10.5 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், 32 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் 75% ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டதாகவும் ஸ்டாலின் சொன்னார்.
ஸ்டாலின் அவர்களே, டி.ஆர்.பி ராஜா அவர்களே… இதற்கு நீங்கள்தான் விளக்கம் கொடுக்க வேண்டும். 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டது என்று சொன்னால், அதில் 75% நிறைவேற்றப்பட்டது என்று சொன்னால் சுமார் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். இத்தொகுதியில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? 32 லட்சத்தில் 75% என்றால் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டுமே…. சொல்வது அத்தனையும் பொய்.
பிரதான எதிர்க்கட்சி மக்களுடைய பிரச்னைகளை எடுத்துச்சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், 10.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாகச் சொன்னதற்கு வெள்ளை அறிக்கை கேட்டேன். தொழிலின் நிலை என்ன? எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்று விளக்கம் கேட்டால், வெள்ளை காகிதத்தை காட்டுகிறார்.
டிஆர்பி ராஜா அவர்களே, உங்களுடைய ஆட்சி வெற்று விளம்பர ஆட்சி என்பதை வெள்ளை காகிதத்தைக் காட்டி நிரூபித்துவிட்டீர்கள். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அங்கு ஒன்றுமே இல்லை. எனவே வெள்ளை காகிதத்தைத் தான் காட்டியாக வேண்டும். இந்த ஆட்சியில் அத்தனையும் பொய், பொய் தவிர்த்து வேறு ஒன்றுமேயில்லை.
ஒரு புள்ளி விவரம் சொல்கிறேன். தொழிற்சாலைகளில் 2019-20 ஆண்டில் தொழிலாளர்கள் எண்ணிக்கை 16.91 பர்சண்டேஜ். அதே 2023-24 திமுக ஆட்சியில் இந்த எண்ணிக்கை 15.95% என்று குறைந்திருக்கிறது. 2019-20ல் ஃபேக்ட்ரி கவுன்ட் பெர்சன்டேஜ் 15.75%, அதே 2023-24 திமுக ஆட்சியில் 15.42%. அப்படியென்றால் தொழிற்சாலை அதிகமாக வந்து வேலை அதிகமாக கிடைத்தது என்றால் என்ன அர்த்தம்? அத்தனையும் பொய். இப்படி பொய் செய்திகளை வெளியிட்டு திமுக மக்களை ஏமாற்றுகிறது.
வேடசந்தூர் பகுதி நூற்பாலைகள் நிறைந்த பகுதி, பல்லாயிரக்கணக்கான பேருக்கு வேலை கிடைக்கிறது. நூற்பாலை தொழில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறது, மின்கட்டணம் உயர்ந்துவிட்டதால் நூல் மில்கள் எல்லாம் மூடுகின்ற அபாயமும், தொழிலாளர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார், சம்பளம் உயர்த்தப்படும் என்றார், ஆனால் செய்யவில்லை. முழுமையாக சம்பளம் கூட கொடுக்க வக்கில்லாத அரசு திமுக அரசு. அதிமுக ஆட்சி இருக்கும்போது 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளிக்கு குறிப்பிட்ட காலத்தில் வங்கியில் பணம் போய் சேரும், அது அதிமுக ஆட்சியின் திறமை.
விவசாயத்துக்கு தண்ணீர் முக்கியம். அந்த நீரை கொடுப்பதற்காக குடிமராமத்துத் திட்டத்தை கொண்டுவந்து அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24மணிநேரம் கொடுத்தோம்.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். வறட்சி ஏற்பட்டக் காலங்களில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசாங்கம் அதிமுக அரசுதான். விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்புத் திட்டம் கொடுத்தோம். முதியோர் உதவி திட்டம் மூலம் லட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை 1000 ரூபாய் கொடுத்தோம். ஒரே சட்டமன்ற விதி 110ன் கீழ் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பைக் கொடுத்து, 90% பேருக்குக் கொடுத்தோம்.
கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். அதேயாண்டு தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம். கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், சிறப்பாக தேர்வெழுதி பட்டம் பெற்றனர். பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். மாணவர், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவருக்கும் பொதுவான அரசாக இருந்தது அதிமுக அரசு.
10 ரூபாய் என்றால் பாலாஜி பேர்தான் மக்களுக்கு ஞாபகம் வருகிறது, அடுத்த கூட்டம் கரூருக்குத்தான் போகிறேன். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கின்றன. டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள், இந்த பணம் மேலிடத்துக்கு போயிருக்கிறது, இப்படிப்பட்ட ஊழல் அரசு தொடர வேண்டுமா?
பத்திரப்பதிவுக்குப் போனால் உடனே பதிவு செய்ய மாட்டார்கள், அதுக்கு ஒரு ரேட், கமிஷன். 50 லட்சத்துக்கு சொத்து வாங்கினால் 10% அதாவது 5 லட்ச ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி எல்லா பகுதியிலும் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துவிட்டது. 67% உயர்ந்துவிட்டது. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான்.
விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. பச்சரிசி சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 50 ரூபாய் திமுக ஆட்சியில் 77 ரூபாய், பொன்னி புழுங்கல் அரிசி அதிமுக ஆட்சியில் 50 ரூபாய் திமுக ஆட்சியில் 72 ரூபாய், இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 30 ரூபாய், திமுக ஆட்சியில் 48 ரூபாய், கடலெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 130 ரூபாய், திமுக ஆட்சியில் 190 ரூபாய், நல்லெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 250 ரூபாய், திமுக ஆட்சியில் 400 ரூபாய்.
துவரம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 74 ரூபாய், திமுக ஆட்சியில் 130 ரூபாய், உளுத்தம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 79 ரூபாய், திமுக ஆட்சியில் 120 ரூபாய். ஆக எல்லா விலையும் உயர்ந்துவிட்டது. ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும் விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை.
அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம். அப்படி ஏழைகளை அதிமுக அரசு பாதுகாத்தது,
ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். இது அதிமுக பிரதான தேர்தல் அறிக்கை. தாழ்த்தப்பட்ட, ஏழை தொழிலாளி குடும்பத்தில் இரண்டு மகன் இருந்தால் திருமணமாகி தனிக்குடித்தனம் போவார்கள், அப்போது வீட்டு மனை இல்லை என்றால், கண்டறிந்து நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டிக்கொடுப்போம். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். இன்று 84 ஆயிரம் ரூபாய் ஒரு பவுன். அதிமுகவின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும்.
கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். ஏழை மக்கள் நோய் வந்தால் அங்கு சென்று சிகிச்சை எடுக்கலாம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து, கிளினிக்கை மூடிவிட்டது. காற்றுக்கு தடை போட முடியாது. அதுபோல், ஏழை மக்களுக்கான இந்த திட்டத்தையும் தடுக்க முடியாது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.
ஏழைகளை வாழ வைக்க வேண்டும், ஏழைகள் வாழ்வு மலர வேண்டும் என்பதே எம்.ஜி.ஆர்., அம்மா கண்ட கனவு. அதுதான் அதிமுக லட்சியம், அது நிறைவேற்றப்பட்டது மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் தொடரும்.
ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி வழங்கும் நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. திமுக அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டமும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் மட்டும் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர், அதாவது 41% பேர் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள். வெறும் 9 பேருக்குத்தான் மருத்துவக் கல்வி கிடைத்தது. அத்தகைய ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கினோம். அதன்மூலம் 2818 பேர் ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள். ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு அதிமுக அரசுதான் உதாரணம். 7.5% இட ஒதுக்கீட்டில் பலன் பெற்றவர் இங்கேயே இருக்கிறார், இதுதான் அதிமுகவின் சாதனை.
உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார் முதல்வர். வீடு வீடாக அதிகாரிகள் வருகிறார்கள். மக்களிடம் இருக்கும் 46 பிரச்னைகள் பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். இன்னும் 7 மாதத்தில் ஆட்சி முடியப்போகிறது. அதற்குள் நிறைவேற்ற முடியுமா? மக்களின் பிரச்னையை தீர்க்கத்தான் அரசு, ஆனால் மக்களுக்கு பிரச்னை இருக்கிறது என்பதையே இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.
இதேபோன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, புகார் பெட்டி என்று ஒரு திட்டம் கொண்டுவந்து மனுக்கள் வாங்கி பிரச்னையை தீர்ப்பேன் என்றார், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணியும் வந்தனர். பாவம் ஐ.பெரியசாமியை ஓரமாக உட்காரவைத்துவிட்டு, உதயநிதிதான் அப்போது பேசினார். மனுக்களை வாங்கினார்கள், பிரச்னைகளைத் தீர்த்தார்களா? அப்படி தீர்வு கண்டிருந்தால், எப்படி 46 பிரச்னைகள் இன்னமும் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்..?
மக்கள் ஸ்டாலின் வார்த்தையை நம்பி மனுவாக எழுதி கொடுத்தார்கள். ஆனால், மனு எங்கே கிடக்கிறது? சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஆற்றில் கிடக்கிறது. எங்களை விட மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறீர்கள். அதற்கு நன்றி.
வேடசந்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைத்தோம், குஜிலியம்பாறை தனி தாலுகா அமைத்தோம், வேடசந்தூர் வழியாக செல்லும் திண்டுக்கல் – கரூர் மாநில நெடுஞ்சாலை நான்குவழிச்சாலையாக சுமார் 450 கோடியில் தரம் உயர்த்தப்பட்டது, தண்ணீர்பந்தம்பட்டியில் சுமார் 7 கோடியில் கலை, அறிவியல் கல்லூரி கட்டப்பட்டது, காமராஜர் பல்கலை உறுப்புக் கல்லூரியாக இயங்கிவந்த கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது, வேடசந்தூர் விவசாயிகள் பலன்பெறும் வகையில் முருங்கை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டது.
18 அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது, தக்காளி, புளி போன்ற விவசாய பொருட்களை குளிர் பதனக் கிடங்கில் பாதுகாக்கவும், மதிப்புக் கூட்டுப்பொருளாக உற்பத்தி செய்திடவும் தையலூரில் மினி உணவுப் பூங்கா அமைக்கப்பட்டது, வேடசந்தூர் சந்தைக்கு 2 கோடியில் கட்டிடம் கட்டப்பட்டது. மின் மயானம் அமைக்கப்பட்டது. நரசிங்கபுரம் வழியில் 7 கோடியில் பாலம் அமைக்கப்பட்டது. அதை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்துவைத்தது, மழை காலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்படும் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று கருப்புத்தேவனூரில் 2 பாலங்கள் நான்கரை கோடியில் அமைக்கப்பட்டது, அதையும் திமுக ஆட்சியில் திறந்தனர், வடமதுரை ஒன்றிய அலுவலகம் கட்டிடம் 3 கோடி அனுமதி வழங்கப்பட்டது, அதுவும் திமுக ஆட்சியில் திறக்கப்பட்டது.
ஒரு முக்கியமான செய்தி. இந்தப் பகுதி வறட்சியானது என்பதால் அப்போது எம்.எல்.ஏவாக இருந்த பரமசிவம் அவர்கள், ஏரிகள் எல்லாம் நீர் நிரப்ப வேண்டும், நீரேற்றம் மூலமாக மாயனூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறும் போது அதிலிருந்து நிரப்ப கோரிக்கை வைத்தார், நான் முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவை விதி 110ன் கீழ் ஆய்வுசெய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அதை கிடப்பில் போட்டுவிட்டனர். திமுக அரசு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. அதிமுக திட்டம் என்பதால் முடக்கினர், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
குஜிலியம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி தாலுகா மருத்துவமனையாக மாற்றுவோம் என்று திமுக வாக்குறுதி அளித்தது, ஆனால் நிறைவேற்றவில்லை அதிமுக ஆட்சி அமைந்தபின்னர் அது நிறைவேற்றப்படும். வடமதுரையில் புதியதாக பேருந்து நிலையம் அமைப்பதாகச் சொன்னார்கள், நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் இக்கோரிக்கையும் நிறைவேற்றப்படும்.
2026 தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்” என்றார் உற்சாகத்துடன்.











; ?>)
; ?>)
; ?>)