• Fri. Apr 26th, 2024

ஆளும் கட்சியால் நமக்கு எத்தனை பிரச்சனைகள்..,
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரபரப்பு பேச்சு..!

Byவிஷா

Apr 16, 2022

தோல்வி என்பது அதிமுக புதிதல்ல என்றும் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்து அதிமுக வரலாறு படைக்கும் என்றும், ஆளும் கட்சியால் நமக்கு எத்தனை பிரச்சனைகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆலோசனைக்கிணங்க விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க மாநகர, ஒன்றிய, நகர கழக, பேரூர் கழக, பகுதி கழக, நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு அமைப்பு தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் விருதுநகரில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், முன்னாள் அமைச்சர், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ், முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது..,
தேர்தல் முறைப்படி நடைபெற அனைவரும் களப்பணியாற்ற வேண்டும். தலைமை இடுகின்ற கட்டளையை நாம் செய்து முடிக்க வேண்டும். நாம் இப்போது எதிர்க்கட்சியாக பணியாற்றி வருகின்றோம். ஆளும்கட்சியினால் நமது கழகத்துக்கு எத்தனையோ பிரச்சனைகள், எவ்வளவு தடைகளை தாங்கி இந்த இயக்கத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சிற்ப்பாக வழி நடத்தி வருகின்றனர்.


ஜெயலலிதா என்ற மாபெறும் தலைவி இல்லை என்ற ஏக்கப் பெருமூச்சு கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் மத்தியிலும் இருந்துகொண்டே இருக்கின்றது. இருந்த போதிலும் ஒவ்வொரு தொண்டர்களின் ரத்த நாளங்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வெற்றி, தோல்வி என்பது வீரனுக்கு அழகு என்று சொல்வார்கள். எம்பி, எம்எல்ஏ தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை இழந்திருக்கலாம். தோல்வி என்பது நமக்கு புதிதல்ல. பல்வேறு காலகட்டங்களில் நாம் கடுமையான தோல்விகளை சந்தித்து மிகப்பெரிய அளவிலான வெற்றிகளை பெற்று உள்ளோம். திருமங்கலம் இடைத்தேர்தல், பெண்ணாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட் கூட இழந்தோம்.


அடுத்து நடைபெற்ற 2011 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை நாம் பெற்றோம். தோல்வி வரும்போது பந்து போன்று இந்த இயக்கம் எழும். இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. இந்த கட்சி மனிதன் ஆரம்பித்த கட்சி கிடையாது. புரட்சித்தலைவர் என்ற புனிதன் ஆரம்பித்த கட்சியாகும். இந்த கட்சியை அழிக்க யாராலும் முடியாது. சாதாரண மனிதர்களையும் சரித்திரத்தில் இடம்பெற செய்து அழுகு பாhர்த்த கட்சி அதிமுகதான். ஒரு லட்சம் தொண்டர்களை பச்சை மை பேனாவில் கையெழுத்து போட வைத்து அழகு பார்த்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அந்த புரட்சித்தலைவிக்கு நன்றிக் கடனாக அடுத்து வரும் காலங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக வென்றது ஆட்சியைப் பிடித்தது என்ற வரலாற்றை நாம் உருவாக்க வேண்டும். தற்போது நடைபெறும் அமைப்பு தேர்தல்களை நாம் ஒற்றுமையுடன் அமைதியான முறையில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். உங்களுக்கு என்றும் எப்போதும் நான் உறுதுணையாக இருப்பேன். இந்த மாவட்டத்தின் எல்லைச்சாமியாக இருப்பேன் என்று என்று பேசினார். கூட்டத்தில் முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் தேர்தல் பொறுப்பாளர்களிடம் தேர்தல் படிவங்கள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *