• Wed. Jan 22nd, 2025

சேலத்தில் மழைநீரால் சூழப்பட்ட வீடுகள் – மக்கள் பெரும் அவதி

சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 154 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகிவுள்ளது.இந்த நிலையில் காலை முதலே சாரல்மழை பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


குறிப்பாக சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள ராஜாபிள்ளைகாட்டில் 100 க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்கள் மூலமாக சூழ்ந்து நிற்பதால் வாகனங்கள் இயக்க முடியாமல் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் சாலை நடந்துவர முடியாமலும் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் தண்ணீர் வீடுகளை சூழ்ந்து நிற்பதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு இரவு முழுவதும் சிரமப்படுவதாக ஆகும் அதிகளவில் விஷப்பூச்சிகள் வீட்டுக்குள் நுழைவதாக அச்சம் தெரிவிக்கின்றனர். மழைநீருடன் கழிவு நீர் சேர்ந்து தெருக்களை சூழ்ந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 4 நாட்களுக்கு மேலாக மழைநீர் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த இருப்பதால் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கால்வாய் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் தண்ணீர் தேங்காமல் தண்ணீர் வெளியேறும் என்றும் தெரிவிக்கின்றனர்.