விராலிமலை, திருச்சி – மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஒரு பாடல் பெற்ற தலம்.
கோயில் பற்றிய சில விபரங்கள்
பிற பெயர்கள்
சொர்ணவிராலியங்கிரி
மூலவர்
சண்முகநாதர் (ஆறுமுகன்)
அம்மன்
வள்ளி மற்றும் தெய்வானை
தல மரம்
காசி வில்வம்
தீர்த்தம்
சரவணப் பொய்கை; நாக தீர்த்தம்
தொன்மை
1000-2000ஆண்டுகளுக்கு முற்பட்டது
சிறப்பு
தல வரலாறு:
தற்போது கோயில் இருக்குமிடத்தில் குரா மரம் ஒன்றிருந்ததாகவும், வேடன் ஒருவன் துரத்தி வந்த வேங்கை அக்குரா மரத்தினுள் மறைந்து விட்டதாகவும், அவ்விடமே ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு வழிபடத் துவங்கியதாகவும் கூறுவர். முனிவர்களும், சித்தர்களுமே அக்குரா மரவடிவில் தவமியற்றி வந்தனர் என்றும் கூறுவதுண்டு. அருணகிரிநாதரைத் தடுத்தாட்கொண்ட முருகப்பெம்மான், அவருக்கு விராலிமலை இருக்குமிடத்தைக் காட்டவே இவ்வாறு வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்ததாகவும் கூறுவர்.
தலச்சிறப்புக்கள்:
வசிஷ்டரும் அவர்தம் இல்லாள் அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தனர்.
இம்மலையில்தான் பரகாயப்பிரவேசம் என்னும் சித்தியை அருணகிரிநாதருக்கு பெம்மான் வழங்கியதாகப் புராணம் உண்டு.
- இத்தலம் குறித்துத் திருப்புகழில் சுமார் 16 பாடல்கள் உள்ளன.
நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம், மற்றும் ஆயுள் நீடிக்கவும் இங்குள்ள முருகனாரை வேண்டிச் செல்வர்.
- இத்தலத்தின் மீது, விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார்.

பங்குனி உத்திரம், கந்த சஷ்டி ஆகியவை இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள்.
தவிட்டுக்குப் பிள்ளை
பிள்ளைச் செல்வம் வேண்டுவோருக்கு நேர்த்திக் கடன் கழிக்கும் பழக்கம் இங்கு உள்ளது. பிள்ளை பிறந்ததும், அதை ஆறுமுகனாரிடமே அவரது பிள்ளையாகக் கொடுத்து விட்டுப் பிறகு பிள்ளையின் மாமன் அல்லது சிற்றப்பன்மார்கள் ஆறுமுகனாருக்குத் தவிட்டை கொடுத்துப் பிள்ளையை பெற்றுச் செல்லும் சடங்கு இங்குப் பிரபலமானது.
சுருட்டு நிவேதனம் பெறும் முருகப்பெருமான்:
குன்றிருக்கும் இட மெல்லாம் குமரன் குடியிருப்பான் என்பதற்கு இணங்க அமைந்துள்ளதுதான் விராலிமலை முருகன் கோவில். இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமானுக்குத் தினமும் நிவேதனமாக சுருட்டு படைக்கப்படுகிறது. முருகன் கோவில்களின் வழக்கத்திற்கு மாறாகவும், விநோதமாகவும் படைக்கப்படுகிறது. முருகன் கோவில்களின் வழக்கத்திற்கு மாறாகவும், விநோதமாகவும் படைக்கப்படும் இந்த நிவேதனத்திற்கு பின்னால் ஒரு கதையே உள்ளது.
முன்பொரு காலத்தில் குமார வாடி ஜமீன் நிர்வாகத்தில், நிர்வாகியாகப் பணிபுரிந்தவர் கருப்பமுத்துப் பிள்ளை. தீவிர முருக பக்தரான இவர், வெள்ளிக்கிழமை தோறும் விராலிமலை முருகப்பெருமானைத் தரிசித்த பின்பே, சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தார்.
ஒருநாள் முருகப்பெருமானை தரிசிக்க, கருப்பமுத்துப்பிள்ளை விராலிமலை வந்தார். அப்போது திடீரெனப்பெய்த பெருமழையால் காட்டாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் கோவிலுக்குச் செல்ல வழியில்லாமல், ஒரு மேட்டுப்பகுதியில் தங்கினார். இரவாகியும் வெள்ளம் வடியாததால், அவருக்கு பசி ஏற்பட்டது. அடாத மழையால் முருகனையும் தரிசிக்க முடியவில்லை. பசியைப் போக்க உணவும் கிடைக்கவில்லை. பிடிப்பதற்கு ஒரு சுருட்டு கூட இல்லையே என்று வருந்தினார். அப்போது முருகப்பெருமான் அங்குத் தோன்றி, கருப்பமுத்துப்பிள்ளைக்குக் காட்சியளித்ததோடு, அவருக்குச் சுருட்டும், நெருப்பும் கொடுத்து, பக்தனின் வருத்தத்தை போக்கினார்.

மறுநாள் காலையில் வெள்ளம் வடிந்தது. கருப்பமுத்துப்பிள்ளை விராலிமலை கோவிலுக்கு சென்றார். முருகனை தரிசித்து, அங்கிருந்தவர்களிடம் நடந்தவற்றை கூறி, முருகப்பெருமானுக்கு படைக்கப்படும் பொருட்களுடன், சுருட்டையும் நிவேதனமாக வைக்க வேண்டும்.என்று வேண்டுகோள் விடுத்தார். அதைத்தொடர்ந்து அன்று முதல் மாலையில் நடைபெறும் சாயரட்சை பூஜையில், நிவேதனமாக சுருட்டும் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
வெகுகாலத்திற்குப் பின்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஒரு முறை விராலிமலை முருகன் கோவிலுக்கு வந்தார். அவர் முருகப்பெருமானை வழிபட்டபோது, நிவேதனமாக சுருட்டுவைக்கப்படுவதைக் கண்டு திடுக்கிட்டு, இனிமேல் நிவேதனமாக சுருட்டைப் படைக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
பின்னர் அவர் புதுக்கோட்டை அரண்மனைக்கு வந்தபோது, அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. பல மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் வயிற்றுவலி தீரவில்லை.
அன்று இரவில்
மன்னரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, தனக்கு விருப்பமான சுருட்டி நிவேதமாக வைக்ககூடாது என்று கூறியதால் வயிற்றுவலியை உண்டாக்கியதாம் கூறினார்.
இதையடுத்து, தொண்டைமான் மன்னர் விராலிமலைக் கோவிலில் முருகப்பெருமானுக்கு மீண்டும், நிவேதனத்தில் கூருட்டையும் சேர்த்து வைக்க உத்தரவிட்டார். அதன் பின் மன்னரின் வயிற்றுவலி தீர்ந்தது
அன்று தொடங்கி இன்று வரை முருகனுக்குத் தடையின்றி நிவேதனமாக 2 சுருட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. பூஜை முடிந்தவுடன் அந்த சுருட்டுகள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பிரசாதமாக பெற்ற சுருட்டுகளை பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு எடுத்துக் சென்று, பூஜையறையில் வைத்து வழிபடுகின்றார்.

பெயர்க் காரணம்
விராலிமலை என்ற பெயர் வந்ததற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறன. ஒன்று. விராலிமலை அருகே விராலூர் என்று ஒரு ஊர் உள்ளது. அதனால் விராலூர்மலை என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி விராலிமலை என்று ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மற்றொன்று… மலையில் விராலிமரங்கள் நிறைந்து காணப்பட்டதாலும், அதில் ஒருமரத்தின் அடியில் முருகன் சிலை அமைந்திருந்தாலும், தல விருட்சமாக விராலிமரம் என்று பெயர் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விராலிமலையில் தெற்கு, வடக்கு பகுதிகளில் குகைகள் உள்ளன. இந்த குகைகளில் சித்தர்கள் தங்கி இருந்ததாக கூறபப்டுகிறது. தெற்கு பகுதியில் உள்ள குகையில் தங்கியிருந்த சாம்பசதாசிவ சுவாமிகள் என்பவர் சித்து வேலைகள் செய்து பக்தர்களுக்கு அருள் வழங்கி வந்தார். அவர் கும்பகோணத்தில் உள்ள திருபுவனத்தில் ஜீவசமாதி ஆகிவிட்டார். அங்கு இன்றும் அவருக்கு ஆசிரமம் உள்ளது. மேலும் எச்சில் பொறுக்கி என்ற ஆறுமுகசாமியும் தெற்கு பகுதி குகையில் வாழ்ந்து மறைந்துள்ளார்.
மேலும், வேறு எந்த முருகன் கோவில்களில் நடை பெறாத அளவில் ஆண்டுக்கு 2 முறை, அதாவது தைப்பூசம் மற்றும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறுது. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆவணி மூலம், கார்த்திகை தீபத்திருவிழா, தைப்பூசம் பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்களும் இங்கு சிறப்பு பெற்றவை. மேலும், மாதம்தோறும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வரும் வழக்கமும் உள்ளது.

வேடனாக வந்த வேலவன்
திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரிநாதர், முருகன் குடிகொண்டிருக்கு தலங்களுக்கு யாத்திரை சென்று, தரிசித்து வந்தார். அப்போது அவர் வயலூர் முருகன் கோவிலுக்கும் வந்து முருகனைத் தரிசித்தார். அங்கு அவருக்குக் காட்சியளித்த முருகப் பெருமான், விராலிமலைக்கு வருமாறு அவரை அழைத்தார்.
அதைத்தொடர்ந்து அடர்ந்த காடுகளின் வழியாக அலைந்து, திரிந்து விராலிமலையை தேடி, அருணாகிரிநாதர் வந்தர். அப்போது, முருகப்பெருமான் வேடனாக வந்து, விராலிமலை கோவிலை அவருக்கு அடையாளம் காட்டியதாகப் புராணம் கூறுகிறது.
அப்படி வேடனாக வந்து வழிகாட்டியதன் நினைவாக, இந்த பகுதியில் வேடங்காட்டுப்பட்டி, கோவில்காட்டுப்பட்டி என்ற பெயர்களில் ஊர்கள் உள்ளன. மேலும் விராலிமலை வந்த அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் அஷ்டமாசித்தி எனப்படும் 8 சக்திகளை வழங்கி, திருப்புகழை பாடச்சொல்லி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
நாரதருக்கு சிலை
பிரம்மாவிற்கும், சிவனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில், சிவன் பிரம்மாவின் 5 தலைகளில் ஒன்றை கிள்ளி எறிந்தார்.இதனால் பிரம்மாவின் புத்திரரான நாரதர் சிவன் மீது கோபம் கொள்ள… பதிலுக்கு சிவபெருமான் அவருக்கு சாபமிட்டார்.
இதையடுத்து நாரதர் சாபவிமோசனம் வேண்ட, விராலிமலை சென்று முருகனை தரிசித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்று சிவபெருமான் கூறினார். இதையடுத்து நாரதர் விராலிமலை வந்து, முருகப்பெருமானை வணங்கி சாப விமோசனம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் வேறு எங்கும் இல்லாத அளவில், இக்கோவிலில் நாரதருக்கு ஐம்பொன்னாலான உற்சவ விக்கிரகம் உள்ளது.

விராலிமலைக்குப் புராணப் பெருமையும் உண்டு. வசிஷ்டரின் மனைவி அருந்ததி பாலமுருகனுக்குப் பாலூட்ட மறுத்ததால் வசிஷ்டரால் சபிக்கப்பட்டார். இதைக் கண்டு வருந்திய முருகப்பெருமான் வசிஷ்டரைச் சபிக்க, பின் இருவரும் சேர்ந்து விராலிமலை முருகனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றனராம்.
சூரபதுமனை பெற்றெடுத்த பாவம் நீங்கும் பொருட்டு காசிப முனிவரும், தன் தந்தையான நான்முகனை (பிரும்மாவை) தண்டித்த சிவனை நிந்தித்த பாவம் போக நாரதமுனிவரும் விராலிமலை முருகனை வழிப்பட்டுச் சாப விமோசனம் பெற்ற தலமாகும். இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இக் கோயிலில் காசிபர், நாரதர், வசிஷ்டர், அருந்ததி ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன.
பல காலமாக பல துறவிகளும், ஞானிகளும், சித்தர்களும் இம்முருகனை நோக்கித் தவமிருந்து, வணங்கி அருள் பெற்றதால் இம்முருகனுக்கு ஞான முருகன் என அருட்பெயரும் உண்டு.
இம்மலையைச் சுற்றி முருகனின் வாகனமான அழகு மயில்கள் நூற்றுக்கணக்கில் வண்ணத்தோகைகளை விரித்தாடிக் காலங்காலமாக முருகனை மகிழ்வூட்டி வருகின்றன.

விராலிமலைப் பகுதியை சோழர், பாண்டியர், பல்லவர், முத்தரையர், வேளாளர், பல்லவர்கள், விஜயநகர நாயக்கர்கள், தொண்டமான் வகையறாவினர் என பலரும் ஆண்டுள்ளனர். மேலும் முருகனின் அருளையும் பெற்றுள்ளனர்.
மலையை சுற்றி மழங்குளம், திருவூரணி, அம்மன்குளம், புதுக்குளம் எனப் பல தீர்த்தக்குளங்கள் உள்ளன.
மேலும், மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கரின் தளபதி அரியநாத முதலியார் வெட்டிய குடிநீர் ஊரணி, இன்றும் – முதலியார் ஊரணி என்ற பெயரில் விளங்குகிறது.
