மதுரை நேதாஜி சாலை தண்டாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் மோசடி செய்த கோயில் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறை இணைய ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி புகார் மனு அளித்துள்ளது.

பாலதண்டாயுத சுவாமி திருக்கோயில்
மதுரை நேதாஜி ரோட்டில் பாலதண்டாயுத சுவாமி திருக்கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சுமார் 8 லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளார் அதே போல பலர், பல லட்ச ரூபாய் நன்கொடைகளைக் கொடுத்துள்ளனர். அத்துடன் மதுரையின் முக்கிய பிரமுகர்கள் திருப்பணிக்கான பெரும்பாலான செலவுகளை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
கோயில் திருப்பணிக்கு உபயதாரர்கள் மூலமாக வந்த 2 லட்சம் ரூபாய் நன்கொடையை கணக்கில் காட்டாமல் திருக்கோவிலில் முக்கிய பொறுப்பில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை கோரியும், முறைகேடு குறித்து விசாரணை நடத்தி நிதியை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், மதுரை மண்டல இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரையிடம் புகார் மனுவை இன்று அளித்தார்.
அவர் அளித்த அந்த மனுவில், பாலதண்டாயுத சுவாமி கோயிலில் திருப்பணி மோசடிகளைத் தடுக்க திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் உபயதாரர்களின் பெயர்களை திருக்கோவில் முன்பாக விளம்பர பலகையில் வைக்க வேண்டும். பாலதண்டாயுத சுவாமி கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால், அவர்களை பணியிடம் மாற்றம்செய்ய வேண்டும். மதுரை மேலமாசி வீதியில் உள்ள இன்மையில் நன்மை தருவார் திருக்கோயில் நுழைவு வாசல் அருகே கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள அசைவ உணவகத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரை நேதாஜி சாலை தண்டாயுத சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட ஏராளமான உபயதாரர்கள் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வழங்கிய நன்கொடை நிதியில் பல லட்ச ரூபாயை அந்த கோயிலின் ஊழியரான முருகேசன் முறைகேடு செய்துள்ளதற்கான ஆடியோ உள்ளிட்ட ஆதாரமும் இருப்பது தெரியவந்துள்ளது எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கோயிலில் பணிபுரியக்கூடிய அர்ச்சகர்கள் அராஜகத்தில் ஈடுபடுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வருவதால் அவர்களை பணியிட மாற்றம் செய்யவேண்டும்.
மேலும் கோயிலில் உபயதாரர்கள் வழங்கும் நன்கொடையில் மோசடி நடப்பதைத் தடுக்கும் வகையில் நன்கொடை கொடுப்பவர்களுடைய பெயர் பலகையை வைக்க வேண்டும். மதுரை இன்மையில் நன்மை தருவார் கோயில் அருகே கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள அசைவ உணவகத்தை அகற்ற வேண்டும் என இணை ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளோம் ,அப்போது கோயிலில் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியும் என இணை ஆணையர் ஒப்புக்கொண்டதோடு, அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என சோலைக்கண்ணன் தெரிவித்தார்.
கோயில் ஊழியர் மழுப்பல்

கோயில் ஊழியர் முருகேசன்
மதுரை நேதாஜி ரோட்டில் அமைந்துள்ள பால தண்டாயுத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள் முதல் எளிய பக்தர்கள் வரை உபயதாரர்கள் பணம் கொடுத்துள்ளனர் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தகவல் வெளியானது. இது குறித்து அரசியல் டுடே மதுரை செய்தியாளர் களத்தில் இறங்கி விசாரணை மேற்கொண்டதில் ஊழல் நடந்திருப்பது உறுதியானது சம்பந்தப்பட்ட கோயிலின் ஊழியர் முருகேசன் உபயதாரர்களிடம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டது குறித்து குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அவரிடம் அரசியல் டுடே செய்தியாளர் கேட்ட போது, அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் முன்னாள் அமைச்சரிடம் பணம் வாங்கியது உண்மை. ஆனால், 8 லட்சம் இல்லை, 7 லட்சம் தான். அந்த பணத்தை அவர் பிரித்து பிரித்து கொடுத்தார் என்று மழுப்பலாக பதிலளித்தார். இந்த முறைகேடு குறித்து உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்டவர் மீது காவல் துறையோ அல்லது துறை அதிகாரிகளோ உரிய விசாரணை நடத்தினால் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருப்பணிக்காக பக்தர்கள் கொடுத்த பணம் கோயிலுக்கு முழுமையாக சென்றடையுமா என பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.