• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சென்னிமலையில் இந்து முன்னணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

Byவிஷா

Oct 14, 2023

சென்னிமலையைப் பற்றி கிறிஸ்தவ போதகர் ஒருவர் தவறாகப் பேசியதைக் கண்டித்து, இந்து முன்னணி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மாதம் 17 ஆம் தேதி கிறித்துவ போதகர் ஒருவர் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் தனது குடும்பத்தினருடன் வீட்டில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தார். இந்த பகுதியைச் சேர்ந்த சிலர் அவருடைய வீட்டுக்கு சென்று பிரார்த்தனை நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் கைகலப்பு ஏற்பட்டது. இதில் தாம் தாக்கப்பட்டதாக கிறிஸ்தவ போதகர் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீது சென்னிமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அதில் 2 பேரைக் கைது செய்தனர். கிறிஸ்தவ போதகரைத் தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிறிஸ்தவ முன்னணி சார்பில் கடந்த மாதம் 25-ந் தேதி சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஒருவர் சென்னிமலையை பற்றி தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. எனவே இதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று மாலை சென்னிமலையை பற்றி தவறாகப் பேசியதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்க மஞ்சுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சென்னிமலையைப் பற்றி தவறாகப் பேசியவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. பெண்கள் சென்னிமலை முருகப்பெருமானின் புகழ் குறித்து பாடல்கள் பாடினர். ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.