
இந்தி படித்தால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர்.
இந்தியா முழுவதும் இரு மொழி கொள்கையே போதுமானது திருமாவளவன் பேட்டி சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது:-
வரி வருவாய் நிதி பகிர்வில் 16வது நிதிக்குழுவில் 41 சதவீதத்தை 40 சதவீதமாக குறைக்கும் முயற்சியில் இந்திய ஒன்றிய அரசு ஈடுபடுவதை அறிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நானும் ரவிக்குமாரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், 16வது நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினோம். 41 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வலியுறுத்தினோம். செஸ், சர்சஜ் போன்ற வரி வருவாயில் மாநில அரசுகளுக்கும் பங்கு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம். என்.எல்.சி போன்ற பொது துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் போது மாநில அரசுகளுக்கும் உரிய பகிர்வை தர வேண்டும் என்று சுட்டி காட்டி உள்ளோம்.

இந்த கூட்டத் தொடரில் கல்வி தொடர்பான விவாதத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி பேசி இருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்க கூடியது. வேதனை தரக்கூடியது. தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தோம். அவர் தான் பேசியதை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்தாரே தவிர வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்பு கோரவோ தயாராக இல்லை. தமிழ்நாடு மக்களை காயப்படுத்தியதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. மும்மொழி கொள்கையில் தமிழ்நாடு அரசு எடுத்து உள்ள நிலைப்பாடு வரவேற்ககூடியது. தமிழ்நாடு நலன்களுக்கு எதிராக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். திமுகவையும் அரசையும் விமர்சிக்கிறோம் என்ற பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்வது கண்டனத்துக்குரியது. இருமொழி கொள்கையே போதுமானது. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இரு மொழி கொள்கையை நடைமுறைப்படுத்துவது தான் இந்திய ஒருமைப்பாட்டிற்கும் மக்களின் ஒற்றுமைக்கும் ஏற்புடையதாக இருக்கும். மும்மொழி கொள்கையை அரசின் கொள்கையாக இந்தி பேச மாநில மக்களின் மீது திணிப்பதை கூடாது என்பது நிலைப்பாடு ஆகும். ஆனால் பா.ஜ.க. வினர் இந்தியை படித்தால் உடனே வேலை கிடைத்து விடும். இந்தியை உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு பெற முடியும் என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்குகின்றனர். இந்தியை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தி பேச கூடியவர்கள் வேலை தேடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். நிலைமை இப்படியிருக்க ஒரே தேசம் ஒரே மொழி என்ற நிலையை எதிர்காலத்தில் உருவாக்க பா.ஜ.க. செய்வதை அம்பலப்படுத்துகிறோம்.
நீட் போன்ற பிரச்சினைகளில் பிற மாநிலங்கள் கையாளும் அணுகுமுறை வேறு. ஆனால் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை கால சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் செய்யும் முயற்சி தென் மாநில முதல்வர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்திய ஒன்றிய அரசு கட்டாயமாக கவனத்தில் எடுத்து கொள்ளும். அப்படி எடுத்து கொள்ள வேண்டிய நிலைக்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறோம்.
14ந் தேதி தமிழ்நாடு அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. அந்த பட்ஜெட் கூட்டத் தொடர் முழுமையான பட்ஜெட் கூட்ட தொடராக இந்த ஆட்சி காலத்தில் நடைபெற உள்ளது. இது மிக முக்கியத்துவம் வாய்ந்த கூட்ட தொடராக அமைய இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசியலமைப்பு சட்டம் 16வது பிரிவின் பட்டியல் சமூகம் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான சதவீத உயர்வு சட்டம் ஒன்று நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்து உள்ளோம். இந்த கூட்ட தொடரில் சட்டமாக கொண்டு வருவார்கள் என்று நம்புகிறோம். அதுபோல் அம்பேத்கார் தொழில் முன்னோடி திட்டம் சிறப்பான திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து இன்னும் வெற்றிக்கரமாக நடத்த வேண்டும். தொழில் தொடங்க விரும்பும் முனைவோர்களுக்குவிரிவாக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். கட்டாயமாக முதல்வர் கூடுதல் நிதி கொடுப்பார் என நம்புகிறோம். நன்னிலம் திட்டம் என்று முதல்வர் அறிவிக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. ஆனால் அதற்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் பல மாவட்டங்களில் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்பது அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. இந்த திட்டத்தில் நிலம் பெற விரும்புகிறவர்கள் விழிப்புணர்வு பெறமுடியாதவர்களாக உள்ளனர். இந்த திட்டத்தையும் வெற்றிக்கரமாக செயல்படுத்த போதிய நிதியை ஒதுக்கீடுசெய்ய வேண்டும்.
மேலளவு போராளிகள் சமூக நீதியை நிலைநாட்ட உயிரிழந்தவர்கள். அந்த கிராமத்தை தத்து எடுத்து வளர்ச்சி திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் கள்ள சாராய குடித்த உயிரிழந்த அந்த கிராமங்களை தத்து எடுத்து வளர்ச்சி அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலளவு உயிரிழந்த குடும்பங்கள் வறுமையில் நீடிப்பதால் அந்த குடும்பத்தினருக்கு வன்கொடுமை சட்டத்தில் உரிய நிதி வழங்கப்பட வில்லை. உரிய நிதியை வழங்கி குடும்பத்தினருக்கு ஒய்வூதிய திட்டத்தை ஆவண செய்ய வேண்டும். பட்ஜெட் கூட்ட தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
