பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி கற்று வரும் மாணவர்களிடையே ஆளுநர் பேசும் போது தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது என பேசியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பாரம்பரியமிக்க பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள். அவர்களில் 20 பேர் தமிழ்நாடு தரிசனம் என்ற பெயரில் தமிழகத்தின் பெருமைகளை நேரில் அறிந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்ட அவர்கள் இன்று கவர்னர் மாளிகைக்கு வந்தனர். அவர்களிடம் கவர்னர் ஆர்.என்.ரவி பேசும்போது..தமிழ்மொழி மீது ஆர்வம் கொண்டு தமிழை கற்றுக்கொண்டு, தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள மாணவர்களுக்கு பாராட்டுக்கள். இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு 3500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கும் முந்தைய வரலாறு உண்டு. இந்தி மொழியை விட தமிழ்மொழி மிகவும் பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. தமிழ் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது. தமிழ் இல்லாமல் பிற மொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக்கொள்ள நினைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தமிழை ஆழமாக படிக்க வேண்டும். தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வரவழைத்து ராஜ் பவன் சார்பில் அவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக இனி நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.