சிங்கப்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தனியார் பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண், சுற்றுலா பயணியாக, சிங்கப்பூருக்கு போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். சுங்க அதிகாரிகளுக்கு, அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

இதை அடுத்து சுங்க அதிகாரிகள், அவருடைய உடமைகளை முழுமையாக பரிசோதித்தனர். உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் அவரை, தனி அறைக்கு அழைத்து சென்று, முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த, பார்சலில், தங்க கம்பிகளை, செயின்கள் போல் வளைத்து மறைத்து வைத்திருந்ததை, கண்டுபிடித்தனர். அதில் 700 கிராம் தங்கம் இருந்தது. அனைத்தும் 24 கேரட் தங்கம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.70 லட்சம்.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பயணியையும் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இந்த நிலையில் தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து, தனியார் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி, சுற்றுலா விசாவில், தாய்லாந்துக்கு போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் மீது சந்தேகப்பட்டு, அவர் உடமைகளை சோதனையிட்டனர். அதில் பார்சல் ஒன்றில் 400 கிராம், உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.40 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போதை பொருளை கடத்தி வந்த பயணியை கைது செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில், அடுத்தது சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம், தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா, மொத்தம் ரூ.1.05 கோடி மதிப்பு உடையது பறிமுதல் செய்யப்பட்டு, சென்னையைச் சேர்ந்த 2 பயணிகளை, சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வரும் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.