உதகை ஆளுநர் மாளிகையில் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஏப்ரல் 25ஆம் தேதி கோவையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உதகைக்கு வருகை புரிவதை முன்னிட்டு, தீட்டுக்கல் மற்றும் மசினகுடி ஆகிய ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் ஏப்ரல் 25 மற்றும் 26ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் மத்திய, மாநில, தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளதால் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நாளை உதகை வருகை புரியுள்ளார்.
இம்மாநாட்டில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைக்க இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஏப்ரல் 25ஆம் தேதி உதகைக்கு வருகை புரிய உள்ளார். ஏப்ரல் 25ஆம் தேதி கோவை சூலூர் ராணுவ விமான தளத்திற்கு வருகை புரியும் அவர் சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை தீட்டுக்கல் பகுதிக்கு வருகை புரிந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக உதகை ஆளுநர் மாளிகைக்கு செல்ல உள்ளார்.
பின்னர் மாநாட்டை துவக்கி வைத்து மூன்று நாட்கள் உதகையில் தங்கும் அவர், தோடர் பழங்குடியினர் மற்றும் உதகையில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய குடியரசு துணைத் தலைவர் ஹெலிகாப்டர் மூலம் உதகைக்கு வருகை புரிவதை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டும் தீட்டுக்கல் மற்றும் மசினகுடி ஆகிய ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கம் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.