• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கோவையில் சூறாவளிக் காற்றுடன் கனமழை..,

BySeenu

May 8, 2026

கோடை வெப்பத்தால் தகித்து வந்த கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று இரவு திடீரெனப் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

மாநகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வரும் இந்தத் மழையினால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

​இன்று இரவு சுமார் 7.30 மணி முதலே கோவை காந்திபுரம், சிவானந்தா காலனி, கவுண்டம்பாளையம், துடியலூர் மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியது. இதேபோல் மேற்குப் பகுதியில் வடவள்ளி, பி.என். புதூர் மற்றும் தெற்குப் பகுதியில் குனியமுத்தூர், சுந்தராபுரம் போன்ற பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

புறநகர்ப் பகுதிகளான ஒத்தக்கால் மண்டபம் மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

​மழையின் தீவிரம் காரணமாக இன்று இரவு 7.45 மணி முதலே மாநகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

குறிப்பாக சிவானந்தா காலனி, ராமநாதபுரம், ஒலம்பஸ், சுங்கம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் ஒட்டுமொத்தப் பகுதியும் இருளில் மூழ்கி உள்ளது.

நீண்ட நேரமாக மின்சாரம் வராததால் வீட்டிற்குள் இருக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

உக்கடம் பேருந்து நிலையம் அருகே, மேம்பாலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தது குறிப்பிடத்தக்கது.