• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை..!

Byமதி

Nov 11, 2021

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இதன் காரணமாக நேற்று 8 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில், இன்றும் 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் (ரெட் அலர்ட்), ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், காஞ்சீபுரம், விழுப்புரம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சென்னையில் பல இடங்களில் 4 நாட்களாகியும் வெள்ளம் வடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வெகுவாக பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

சென்னையில் நேற்று பகலில் லேசான மழை பெய்தது. மாலையில் மழை தீவிரம் அடைந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதை காண முடிந்தது.

இதற்கிடையே வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாமல்லபுரத்துக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று காலை கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்கவேண்டும். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும். நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்கவேண்டும். ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை முழுவதும் தவிர்க்கவேண்டும்.

அடையாள அட்டை, கல்வி சான்றிதழ்கள், நிலப்பட்டா, பத்திரங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை நெகிழி பைகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீடுகளின் அருகாமையில் அறுந்த மின்கம்பிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பினை கருதி அருகில் இருக்கும் நிவாரண மையங்களில் தங்கிக்கொள்ளலாம்.

டார்ச் லைட்கள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்தி, மருந்துகள் மற்றும் உலர்ந்த உணவு வகைகளை நெகிழி பைகளில் வைத்து எடுத்துச் செல்ல ஏதுவாக வைத்துக்கொள்ள வேண்டும். நீர் தேங்கும் பகுதிகளில் கால்நடைகளை கட்டி வைக்காமல், கால்நடைகள் தாங்களாகவே எளிதில் வெளியேறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் மின்கம்பங்களின் அருகே செல்வதை தவிர்க்கவேண்டும். நீரிலோ அல்லது மின்சாரத்திலோ பொதுமக்கள் காயப்பட நேர்ந்தால் உடனே 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும். பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், 9445869848 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.