• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

டெல்டாவில் இரவு முழுவதும் கனமழை
சம்பா பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம்

ByA.Tamilselvan

Nov 12, 2022

டெல்டாவில் இரவு முழுவதும் கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சீர்காழியில் 43.6 சென்டி மீட்டரும், கொள்ளிடத்தில் 31.5 சென்டிமீட்டரும், சிதம்பரத்தில் 30.7 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மேலும், செம்பனார்கோயில் -24.2 செ.மீ, பொறையார் – 18.3 செ.மீ, மயிலாடுதுறை – 16 செ.மீ மழை பதிவாகி உள்ளது. கனமழையால் டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையையொட்டி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாநில பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்கள், சென்னை, காஞ்சீபுரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் மீட்பு பணியில் படகுகளுடன், தேசிய பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் உள்பட 60 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் உள்பட தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.