வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை உருவாகி உள்ளது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, இன்று (28-09-2021) திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வருகிற 30-ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யலாம். அக்டோபர் 1ஆம் தேதி தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 2ஆம் தேதி உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோவை சின்னக்கல்லாறு பகுதியில் 13 செ.மீ., குறைந்தபட்சமாக கடலூர் மாவட்டம் வடக்குத்து பகுதியில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கேரளா, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவித்துள்ளார்.