விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி சாலையில் ஈஞ்சார் விலக்கு அருகில் குட்கா புகையிலை பொருட்கள் இருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் மனோகர் அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தனிப்படையினர் அப்பகுதியில் சோதனை செய்ததில், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மற்றும் கார்த்திக் என்பவர் ஈஞ்சார் விலக்கு அருகில் சரவண மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரியவந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட தனிப்படை பிரிவு சார்பு ஆய்வாளர் கௌதம் தலைமையில் போலீசார் சோதனை செய்தபோது பட்டாசு குடோனில் பட்டாசுகள் உடன் கலந்து சுமார் 18 லட்சம் மதிப்பிலான 55 குட்கா புகையிலை மூட்டைகள் வைத்திருந்தது தெரியவந்தது. நவநீதகிருஷ்ணன், கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்த குட்கா புகையிலை மூட்டைகளை பறிமுதல் செய்ததுடன், பொலிரோ காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 80 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.