சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் நேரு அவர்கள் பொது மக்களிடம் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தி மனுக்களை பெற்று வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களால் சேலத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட கே.என்.நேரு தொடர்ந்து இரண்டாவது நாளாக பொதுமக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்று வருகிறார். இன்று காலை இலங்கை அகதிகள் முகாம் இருக்கும் குருக்குபட்டிக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு வீடு கட்டும் பணியை துவக்கி வைத்து, பின்னர் ஓமலூரில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அவற்றுக்கு இரண்டு மாதத்திற்குள் மாவட்ட ஆட்சியர் மூலமாக தீர்வு காணப்படும் என்று அறிவித்தார்.
மேலும் சரக்கபிள்ளையூரை சேர்ந்த பார்வையற்ற முதியவர் ஒருவருக்கு உடனடியாக முதியோர் உதவித் தொகைக்கான ஆணையை மேடையிலேயே வழங்கினார். மேலும் பயனாளிகளுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் ஓமலூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் தங்களது மனுக்களை அளிக்க திரளாக கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து கே.என்.நேரு அவர்கள் காடையாம்பட்டி, மேச்சேரி ஒன்றியம், மேட்டூர் தாலுகா, சங்ககிரி தாலுகா ஆகிய இடங்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களில் பங்கு பெற இருக்கிறார்.