• Wed. Sep 11th, 2024

துப்புரவு பணியாளர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 35 ஆண்டுகளாக மாதம் 105 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து, உயர்நீதிமன்றம் வேலை நிரந்தரம் செய்ய ஆணை பிறப்பித்தும் அந்த ஆணையை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வரும் தமிழக அரசை கண்டித்து வயது முதிர்ந்த காலத்திலும் துப்புரவு பணியாளர்கள் நாகர்கோவிலில் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்ட அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர்களாக பணி புரிந்த பாப்பா, லட்சுமி வசந்தகுமாரி, சொக்கலிங்கம் தாமஸ், முருகன், ஜெக செல்வன் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தேர்வு செய்யப் அவர்கள், பகுதி நேர ஊழியர்களுக்குரிய சம்பளத்திலேயே பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கின்றனர்.

ஆனால் இவர்களைப் போன்று பணியாற்றிய பலருக்கு அரசு ஆணைப்படி முன்தேதியிட்டு பணி வரன்முறை செய்து பண பலன்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே போன்று தங்களுக்கும் பணி வரன்முறை செய்து பண பலன்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் அவர்களது மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கடந்த 28ந் தேதி குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் கல்வி துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் 20 நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் துப்புரவு பணியாளர்கள் இன்று காலை குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு திரண்டனர்.

அவர்கள் அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கல்வி துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையை துப்புரவு பணியாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *