• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புத்தாண்டைமுன்னிட்டு முதல்வர்,ஆளுநர் வாழ்த்து

ByA.Tamilselvan

Jan 1, 2023

ஆளுநர், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புத்தாண்டையொட்டிவாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், வெற்றியை கொண்டு வரட்டும்” என்று கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியில், “அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-ல் வீறுநடை போடுவோம்! புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக! இணையற்ற இளைய ஆற்றல் வெல்க!” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துச் செய்தியில், “மலருகின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும்; அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியிலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று, எவ்வித இன்னலுக்கும் ஆளாகாமல் சிறப்புடன் வாழ்ந்து வந்ததை இந்த நேரத்தில் பெருமையுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். புலரும் புத்தாண்டு, அனைவருக்கும் ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்;
இருளும் சோகமும் விலகி இருக்க, புதிய ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும்; நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோஷம், வெற்றி இவற்றையெல்லாம் இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வழங்கட்டும் என, எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.