தாம்பரம் அருகே அமைந்துள்ள சென்னைக் கிறித்தவக் கல்லூரி (MCC)யின் அரசு உதவிப் பெறும் பிரிவின் 46வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி ஆண்டர்சன் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

2024ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சாதனைகளை கொண்டாடும் விதமாக இந்த விழா நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் பால் வில்சன் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி (CMC)யின் மேனாள் வெருவியியல் துறைத் தலைவரும், தேசிய வெருவியியல் நிறுவனம் (NIV) முன்னாள் இயக்குநருமான முனைவர் பிரியா ஆபிரகாம் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
மேலும், கேரள மாநிலத்தின் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் V.S. சுனில் குமார் உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு மொத்தம் 586 இளங்கலை மாணவர்கள், 356 முதுகலை மாணவர்கள் மற்றும் 1 ஆய்வியல் நிறைஞர் மாணவர் என மொத்தம் 943 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
சிறப்பு விருந்தினராகப் பேசிய முனைவர் பிரியா ஆபிரகாம் அவர்கள், கல்வியின் மூலம் சமூக முன்னேற்றம் அடைவதின் அவசியத்தையும், மாணவர்கள் புதுமை மற்றும் ஆராய்ச்சி நோக்கத்துடன் முன்னேற வேண்டியதையும் வலியுறுத்தினார்.
மேலும், UPSC தேர்வில் 57வது இடத்தைப் பெற்ற கல்லூரி மாணவி செல்வி ஸ்ரீஜா மேடையில் பாராட்டப்பட்டார். இக்கல்வியாண்டின் சிறந்த துறையாக தாவரவியல் துறை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
இந்த பட்டமளிப்பு விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.




