
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஈச்சம்பட்டி எனும் இடத்தில் திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஈச்சம்பட்டியில் எதிரே வந்த வாகனத்திற்கு இடம் கொடுக்க முயன்ற போது சாலையோரம் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்டு வரும் பள்ளத்தில் திடீரென சரிந்தது.
இதில் இந்த அரசு பேருந்தை இயக்கி வந்த ராஜேந்திரன் என்ற ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்து முழுவதும் சாய்ந்துவிடாமல் உடனடியாக செயல்பட்டு நிறுத்திய சூழலில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
உடனடியாக வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அரசு பேருந்து பள்ளத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டது.
பள்ளி மாணவ மாணவிகள் அதிகம் பயணித்து வந்த இந்த அரசு பேருந்து பள்ளத்தில் சரிந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பெரும் விபத்து ஏற்பட்டு விடாமல் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்திய ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
