• Sat. May 11th, 2024

அரசு உதவி பெறும் பள்ளியை, தனிநபருக்கு பெயர் மாற்றம் செய்து மோசடி…

ByM. Dasaprakash

Nov 29, 2023

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை முத்துராஜா தெருவில் இயங்கி வருகிறது நாடார் நடுநிலைப்பள்ளி, இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டுக்கு முன்பு காலகட்டத்தில் இப்பள்ளியானது அந்தோணியார் நடுநிலைப்பள்ளி என்ற பெயரில் இயங்கி வந்தது. பள்ளியின் உரிமையாளராக ஜான் பிரிட்டோ செல்வராஜ் என்பவர் இருந்து வந்துள்ளார்.

அப்பள்ளியை பாலகிருஷ்ணன் என்பவர், கல்வித்தந்தை காமராஜர் அறக்கட்டளை என்ற பெயரில் தமிழ்நாடு சங்க பதிவு சட்டப்படி ” ஒரு தன்னார்வல சங்கத்தை பதிவு செய்து அறக்கட்டளை நிர்வாகிகளுடன் இணைந்து சுமார் 2,57,000 ரூபாய்க்கு அறக்கட்டளை பெயரில் கிரையம் செய்து பள்ளி கட்டிடத்தை பெற்றுள்ளனர்.

மேலும் அந்தோனியார் நடுநிலைப்பள்ளி என்ற பெயரை நாடார் நடுநிலைப் பள்ளி என்று கடந்த 2001 ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்து கடந்த 23 ஆண்டுகளாக பள்ளி செயல்பட்டு வருகிறது.

நாடார் நடுநிலைப் பள்ளியின் தாளாளர் பாலகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். மேலும் சங்கத்தின் தலைவரான பாலகிருஷ்ணன் அவ்வப்போது உறுப்பினர்களில் ஒருவரான கண்ணன் என்பவரிடம் அடிக்கடி சங்கத்தின் நிலைபாடு குறித்தும் பள்ளிகளின் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் பாலகிருஷ்ணனின் மகனாகிய கோகுலகிருஷ்ணன் பெரியகுளத்தில் இயங்கி வரும் கல்வித்தந்தை காமராஜர் அறநிலையத்தைப் பற்றியும் பள்ளியில் செயல்பாடுகள் குறித்தும் சங்க செயலாளரிடம் விளக்கம் கேட்க முற்பட்டபோது அவரை சந்திக்க விடாமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

சந்தேகம் அடைந்த கோகுல கிருஷ்ணன் கல்வித்தந்தை காமராஜர் அறக்கட்டளை மற்றும் நாடார் நடுநிலைப் பள்ளியின் வில்லங்க ஆவணச் சான்றை எடுத்துப் பார்க்கையில், தற்போது பள்ளியானது கல்வித் தந்தை காமராஜர் அறக்கட்டளை சங்கத்தின் செயலாளராகிய கண்ணனின் மனைவி ஜெய ரூபிணிக்கு 2012 ம் ஆண்டு ரூபாய் 20,85,000/- க்கு செய்து கிரையம் செய்து கொடுத்திருப்பது தெரிந்து கோகுல கிருஷ்ணன் அதிர்ந்து போனார். அதனைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்ற கிளை இதில் வழக்கு தொடுத்தார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையானது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரித்த போது அந்த விசாரணையை கல்வித்துறை உயர் அதிகாரிகளை கொண்டு ஆவணங்களை சரிபார்த்து உரிய விசாரணை நடத்த கூறி உத்தரவிட்டது.

மேலும் அதனைத் தொடர்ந்து காமராஜர் அறக்கட்டளை தற்போதைய தலைவர் மற்றும் முன்னாள் இருந்த அறக்கட்டையில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளையும் தற்போதைய நிர்வாகிகளையும் அழைத்து கல்வித்துறை இணை இயக்குனர் பொன்னையா தலைமையில் தேனி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இது குறித்து முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணனின் மகன் கோபாலகிருஷ்ணன் கூறுகையில் தனது தந்தை மற்றும் சில நிர்வாகிகள் சேர்ந்து காமராஜர் அறக்கட்டளை என்ற பெயரில் நாடார் நடுநிலைப்பள்ளி உருவாக்கி செயல்படுத்தி வந்ததாகவும் தனது தந்தை இறந்த பிறகு தனது தந்தையின் பெயரை நீக்கிவிட்டு தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் கண்ணன் என்பவர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு தனது மனைவியின் பெயரான ரூபிணிக்கு பள்ளி நிர்வாக சொத்துக்களை பெயர் மாற்றம் செய்து விற்பனை செய்ய முயன்றுள்ளார் என தெரிவித்ததோடு தனது தந்தை காமராஜ் அறக்கட்டளை ஆரம்பித்த போது உள்ள அனைத்து ஆவணங்களையும் கோபாலகிருஷ்ணன் கல்வித்துறை இணை இயக்குனரிடம் வழங்கி உரிய விசாரணை நடத்தப்பட்டு அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியை பழைய இயக்குனர்களைக் கொண்டு நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் மோசடி செய்த கண்ணன் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தற்போது படித்து வருவதாலும் தனிநபரின் சுயலாபத்துக்காக பள்ளியை மூடும் நிலைமைக்கு கொண்டு வந்துள்ளதாக கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *