கம்பத்தில் மழைவெள்ளத்தால் இடிந்த வீட்டு உரிமையாளர்களுக்கு அரசின் நிவாரண தொகை. எம்பி மற்றும் சேர்மன் வழங்கினர்.

முதல்நிலை நகராட்சியான கம்பத்தில் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடை கால்வாய் மற்றும் ஓடைகள் வழியாக சின்ன வாய்க்கால் மற்றும் வீரப்பநாயக்கன் குளத்தில் கலக்கின்றன. இந்நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன் இப்பகுதியில் திடீரென காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாக்கடை கால்வாய்கள் ஓடைகளில் கழிவு நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
கம்பம் பார்க்ரோடு, நெல்லுகுத்தி புளியமரம்தெரு, போர்டு ஸ்கூல் தெருக்களில் உள்ள ஓடைகளில் மழைநீருடன் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர், ஆதிசக்தி விநாயகர் கோவில் தெருவில் நகராட்சி பள்ளியை ஒட்டி செல்லும் ஓடையில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் கால்வாயில் செல்லமுடியாமல் பள்ளி வளாகத்தில் சூழ்ந்து, பின் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் புகுந்து குளம் போல் தேங்கி நின்றது.
இதனால் இப்பகுதியில் உள்ள ராமகிருஷ்ணன், சுந்தரி, சக்திபாலா, நல்லுபிள்ளை, ரத்தினசபாபதி ஆகியோரது வீட்டின் பின்பக்க சுவர்கள் அடியோடு சரிந்து விழுந்தது.
இந்நிலையில் மழைவெள்ளத்தால் வீட்டு சுவர் இடிந்த வீட்டு உரிமையாளர்களுக்கு அரசின் நிவாரண தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தேனி எம்பி தங்கத்தமிழ்செல்வன் மற்றும் கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் பயனாளிகளுக்கு நிவாரணத்தொகை மற்றும் அரிசிபை, சேலை உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்கினர்.

இதையடுத்து பள்ளி வளாகத்தில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளையும், சத்துணவு மையத்தையும், பள்ளி அருகே உள்ள வட்டார கல்வி அலுவலகத்தையும் பார்வையிட்டனர். அப்போது வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மழைவெள்ளத்தில் நனைந்த ஆவணங்கள் வெயிலில் காயவைத்திருப்பதை எம்பியிடம் காட்டி, மழைநீர் அலுவலகத்தில் புகாதவாறு வேண்டிய ஏற்பாடுகள் செய்துதரக்கூறினர். எம்பியும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
நகராட்சி ஆணையாளர் உமாசங்கர், உதவி பொறியாளர் சந்தோஷ்குமார், மண்டல தாசில்தார் கார்த்திக், நகரமைப்பு அலுவலர் கீதா, திமுக மூத்த வழக்கறிஞர் துரை நெப்போலியன், நகர்மன்ற உறுப்பினர்கள் சாதிக், செந்தில்குமார், விருமாண்டி, அபிராமி,லதா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.