சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் ‘செம்மொழி நூலகம்’ என்ற பெயரில் நூலகம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப். 8ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை (பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலன்) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 30 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமான அறிவிப்பாக 275 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் ‘செம்மொழி நூலகம்’ ஏற்படுத்தப்படும் என்பதுதான்.
இதன்படி, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியரின் நலனுக்காக ‘செம்மொழி நூலகம்’ என்ற பெயரில் தலா ஒரு நூலகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை செயல்படுத்த தேவைப்படும் 2 கோடியே 74 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் நிதியை ஒதுக்க நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.